`தேடல் ரொம்ப அதிகமாச்சுனா மகள் கல்லறையைப் போய்ப் பார்ப்பேன்!' - ஸ்னோலின் தாயார் கண்ணீர் | I did not think my daughter is dead says Snowlin mother

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (21/05/2019)

கடைசி தொடர்பு:13:13 (21/05/2019)

`தேடல் ரொம்ப அதிகமாச்சுனா மகள் கல்லறையைப் போய்ப் பார்ப்பேன்!' - ஸ்னோலின் தாயார் கண்ணீர்

”என் மகள் இறந்துட்டதா நான் நினைக்கல. வெளியூர்ல படிச்சிக்கிட்டு இருக்குறதாகத்தான் நினைக்கிறேன்” எனச் சொல்லி உருகுகிறார் துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார்.

ஸ்னோனிலின் தாயார் வனிதா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திய முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த கோரச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இத்துயரச் சம்பவம் நடந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு வகையிலும் தடை விதித்துள்ளது காவல்துறை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் மட்டும் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்திட முடிவு செய்துள்ளார்கள் குடும்பத்தினர்.

போராட்டக் களத்தில் ஸ்னோனிலின்

இச்சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த மாணவி ஸ்னோலினை நினைத்துப் பார்க்கையில் மனம் தாங்கவில்லை. ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம், “நாளைக்குப் போராட்டத்துக்குப் போகணும். சீக்கிரம் எந்திரிக்கணும்னு போன வருஷம் இதே நாள் இரவில் சொல்லிட்டுத் தூங்கினா. மறுநாள் (மே-22ம் தேதி) காலையில் ஊர் மக்களுடன் பேரணியாகப் போன என் மகளை வாயில சுட்டுட்டாங்கன்னு சொன்னதும் எனக்கு உயிரே போயிடுச்சு. நாளையோட என் செல்ல மகள் எங்களைவிட்டுப் போயி ஒரு வருஷம் ஆகுது. இந்த ஒரு வருஷத்துல ஒவ்வொரு நாளும் நான் படாத கஷ்டம் இல்ல.

வீட்டுக்குள்ள எங்க திரும்பினாலும் ஸ்னோலினோட முகம் தெரியுது. தூங்கினா `எம்மா... எம்மா...”ன்னு ஆசையாக் கூப்பிடுற அவள் குரல் கேட்குது. ”தப்பை தட்டிக் கேட்கணும். இந்த உலகத்துல பிறந்ததுக்கு நம்மளாள முடிஞ்ச ஏதாவது நல்லது செய்யணும். அதுக்கு வக்கீலுக்குப் படிக்கப்போறேன்”னு கம்பீரமா சொன்னா. அவள், இப்போ உயிரோட இருந்திருந்தா, லா காலேஜ்ல முதல் வருஷம் படிப்பை முடிச்சிருப்பா. இப்போகூட அவள் இறந்துட்டதா நான் நினைக்கல. வெளியூர்ல படிக்கப் போயிருக்கான்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். தினமும் காலையில் எந்திரிச்சதும் அவளோட பீரோவை திறந்துப் பார்ப்பேன்.

ஸ்னோனிலின் தாயார் கண்ணீர்

ஸ்னோவோட நினைப்பு வரும் போதெல்லாம், அவளோட போட்டோவப் பார்த்துக்கிட்டு இருப்பேன். சர்ச்சில போயி ஜெபம் பண்ணுவேன். தேடல் ரொம்ப அதிகமாச்சுன்னா, அவங்க அப்பாவைக் கூட்டிக்கிட்டு கல்லறைக்குப் போயி என் மகளைப் பார்த்துட்டு வருவேன். எல்லாருக்கும் மே-22தான் துப்பாக்கிச்சூடு நாள்னு நினைவுக்கு வரும். ஆனா, எனக்கு ஒவ்வொரு மாசம் 22-ம் தேதியும் என் மகள் இறந்த நாள்னுதான் நினைவுக்கு வருது. அழுது அழுது கண்ணுல கண்ணீரெல்லாம் வத்திப் போச்சு. சந்தோஷம் போச்சு. நிம்மதி போச்சு. எல்லாமே போச்சு. என் மகளைவிட எனக்கு எதுவும் முக்கியமில்ல. இனிமேல் இதைப்போல சம்பவம் உலகத்துல எங்கேயும் நடக்கவே கூடாது. என்னைப்போல எந்தத் தாய்க்கும் இந்த நிலைமை வரவும் கூடாது” என்றார் கண்ணீருடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க