வீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு! - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல் | Two villagers clash near Ramanathapuram Houses and vehicles are damaged

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (21/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (21/05/2019)

வீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு! - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்

ராமநாதபுரம் அருகே, பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், வீடுகள்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுடன், இருசக்கர வாகனங்களும் எரிப்பு. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சேதப்படுத்தப்பட்ட வீடு
 

ராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் மற்றும் பாப்பாகுடி கிராமங்களில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் வசித்து வருகின்றனர். இந்த இரு கிராமத்தினர் இடையே முன் விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், தனது கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, கவரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், ரஞ்சித்குமாரையும் அவரது உறவினரான முத்துசெல்வத்தையும் தடுத்து அவர்களைத் தாக்கியுள்ளனர்.

மோதல் காரணமாக சேதமடைந்த பைக் - சாலை மறியல் 

இது தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், இரு தரப்பைச் சேர்ந்த 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், காயம் அடைந்தவர்களை ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைபெற்றவர்களைக் காணவந்த இரு தரப்பினரும், மருத்துவமனைக்குள்ளேயே தகராறில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் தலையிட்டு, மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, கவரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் பாப்பாகுடி கிராமத்திற்குள் புகுந்து, அங்குள்ள வீடுகள்மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், 5 இருசக்கர வாகனங்களைத் தீ வைத்து சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி கவரங்குளம் கிராமத்திற்குச் சென்றனர். ஆனால், அங்கு ஆண்கள் யாரும் இல்லை. இதைத் தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். அப்போது, வயற்காடுகளில் மறைந்திருந்த 12 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, ஞாயிற்றுக் கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்த பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில், பாப்பாகுடி கிராமத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் அமைப்பினர் மற்றும் பாப்பாகுடி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே நடந்த இந்த மோதலால், பாப்பாகுடி மற்றும் கவரங்குளம் கிராமங்களில் பதற்றம் நிலவியுள்ளது. இதைத் தடுக்க, இரு கிராமங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.