துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு! | Case filled for 47 persons as a precaution action that gunfire memorable meeting

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (21/05/2019)

கடைசி தொடர்பு:15:11 (21/05/2019)

துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கான முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், அஞ்சலி நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில், 100-வது நாள் முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் நடந்து நாளை ஓராண்டு நிறைவு பெறுகிறது. உயிரிழந்தோருக்கான அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சில நிபந்தனைகளுடன் அனுமதித்தது நீதிமன்றம்.

இதற்கிடையில், மாவட்ட எஸ்.பி முரளிரம்பா தலைமையில் விசைப்படகு மீனவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், முக்கிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.பி முரளிரம்பா, ``நான் மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்று வரும் 24-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற உள்ளது. தற்போது வரை தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. மக்களின் முழு ஒத்துழைப்புதான் இதற்குக் காரணம். இதேபோல, நாளையும் எவ்விதப் பிரச்னையும் ஏற்படாதபடி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு காவல்துறை எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறது” என்றார்.

தூத்துக்குடி  மாவட்ட எஸ்.பி முரளிரம்பா தலைமையில் கூட்டம்

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் நீதிமன்ற உத்தரவின்படி மண்டபத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆலைக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிய குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய நபர்கள் 47 பேர் மீது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

சம்மனைப் பெற்று ஆஜரானவர்களிடம், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் விசாரணை நடத்தினார். இதையொட்டி தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாகத் தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படைப் பிரிவினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டப் பகுதிகளில்  கலவரத் தடுப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க