` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..!' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி | old women helps for relief work

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (21/05/2019)

கடைசி தொடர்பு:15:00 (21/05/2019)

` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..!' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில், இளைஞர்களால் நடைபெற்றுவரும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளுக்காக, தானாக முன்வந்து மூதாட்டி ஒருவர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சம்பாதித்த பணத்தை  வழங்கி, இளைஞர்களை நெகிழ வைத்தார்.

நூறுநாள் வேலைப்பணத்தை வழங்கிய மூதாட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஆறுகள், குளங்கள், கிணறுகள் என எவற்றிலும் தண்ணீர் இல்லை. மாவட்டம் முழுவதுமே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இந்த நிலையில்தான், இனிவரும் காலங்களில் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், நீர் நிலைகளைத் தூர் வாருவதற்காக, கொத்தமங்கலம் 'இளைஞர்கள் நற்பணி மன்றம்' உருவாக்கி, அனைவரிடமும் நிதி வசூல்செய்து, அந்தப் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றிலிருந்து குளம், ஏரிகளுக்குச் செல்லும் புதர் மண்டிக்கிடந்த வாய்க்கால்கள் அனைத்தையும் தங்களது சொந்தச் செலவில் தூர்வாரி அசத்திவருகின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியை அந்தப் பகுதி மக்கள் பாராட்டுவதுடன், தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து உதவிவருகின்றனர். குறிப்பாக, வெளிநாடு வாழ் இளைஞர்களும் தேவையான பொருளாதார  உதவிகளைச் செய்துவருகின்றனர். இதனால், தற்போது கொத்தமங்கலம் பகுதியில்  நீர் நிலைகளைத் தூர் வாரும் பணி ஜரூராக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில்தான், இளைஞர்களின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், கொத்தமங்கலம் சிதரம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் (58) என்பவர், தான் நூறு நாள் வேலை செய்து சம்பாதித்த ரூ.10 ஆயிரம் பணத்தைக் கொடுத்து நெகிழவைத்தார்.

நீர் நிலைகளைத் தூர்வார உண்டியல் பணத்தை கொடுத்த சிறுமிம் சிறுவன்

ராஜம்மாளிடம் பேசினோம்,  "அம்புலி ஆறு,  20 வருஷத்துக்கு முன்னால எப்பவுமே தண்ணீர் ஓடிக்கிட்டிருக்கும். சிறுசுல இருந்து பெரிசு வரைக்கும் எல்லாரும் உற்சாகமா குளிப்பாங்க. கொஞ்ச வருஷமா சரியான மழை பெய்யலை. அப்படியே மழை வந்தாலும், தண்ணீர் தேங்காதபடி கால்வாய் எல்லாம் புதர் மண்டிக் கெடந்துச்சு. இதற்கு விடிவு காலம் பிறக்காதா'ன்னு நெனச்சுக்கிட்டு இருந்தப்பதான், எங்க ஊர் பிள்ளைகளாச் சேர்ந்து, எல்லாத்தையும் தூர் வாரிக்கிட்டு கெடக்குதுங்க. அந்த இளைஞர்களில் என் பையன் ஆனந்தும் ஒருத்தன். ஆனந்த், என்கிட்ட ரொம்ப சிரமப்பட்டு எல்லாரும் வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். நம்மலால முடிஞ்ச உதவி செய்யணும் சொன்னான். கஜா புயலுக்கு அப்புறம் கூலிவேலை  எதுவும் சரியா கிடைக்கலை. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட வேலைதான் கிடைக்கிது. நூறு நாள் வேலை செஞ்சு அதுல கிடைச்ச ரூ.10 ஆயிரம் பணத்தை கடைசிக் காலத்துக்கு உதவும்னு சேர்த்துவச்சிருந்தேன். உடனே எதப்பத்தியும் யோசிக்காம, அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டுபோய் வேலை செய்கிற பிள்ளைககிட்ட கொடுத்திட்டேன். அந்தப் பிள்ளைகளுக்கு மேற்கொண்டு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யலாம்னு இருக்கிறேன். இதே மாதிரி எல்லா ஊரிலும் அந்த ஊர் இளைஞர்கள் சேர்ந்து ஆறு, குளங்களைத் தூர் வாரணும்" என்கிறார்.

இதேபோல, கொத்தமங்கலத்தைச் சேர்ந்த திருஞானம் என்பவரது மகன் சக்திவேல் (10), சுரேஷ் என்பவரது மகள் அனுஷ்கா (9)  இருவரும் தாங்கள் சேர்த்துவைத்திருந்த ரூ.4 ஆயிரம் வரையிலான உண்டியல் பணத்தை நீர் நிலைகளைத் தூர் வாருவதற்காக இளைஞர்கள் குழுவினரிடம் வழங்கினர்.