டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்! - நாமக்கல்லில் அதிர்ச்சி | Child died after beaten up my Mother in Namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (21/05/2019)

கடைசி தொடர்பு:15:53 (21/05/2019)

டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்! - நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல் அருகே டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை, தாய் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகள் லத்திகாவை அடித்துக்கொன்ற தாய்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தன் கணவர் முத்துப் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகா ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த 5 வயது பெண் குழந்தை லத்திகாஸ்ரீ டிவி பார்த்துக்கொண்டு இருந்ததால், படிக்கவில்லை எனக்கூறி நித்திய கமலா சிறுமியை அடித்ததாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த குழந்தை மயக்கமடைய உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

நாமக்கல் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து நித்திய கமலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, 'நித்திய கமலாவுக்கும் தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகா ஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால், நித்திய கமலத்துக்கும் பிரசன்னாவுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து முத்துப் பாண்டியன் என்பவருடன் நித்திய கமலத்துக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. 

குழந்தை லத்திகா ஸ்ரீ, இவர்களுடனே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதனிடையே முத்துப் பாண்டியனிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துப் பாண்டியன் அடித்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது. முத்துப் பாண்டியனை காப்பாற்றுவதற்காக, குழந்தையை தான் அடித்ததாக நித்திய கமலா கூறியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க