`10000 ரூபாய் கொடுங்க; 7000 ரூபாய் தாறேன்!'- பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ ஆம்ஸ்ட்ராங் கைது | vao arrest second time for bribe near Virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (21/05/2019)

கடைசி தொடர்பு:17:11 (21/05/2019)

`10000 ரூபாய் கொடுங்க; 7000 ரூபாய் தாறேன்!'- பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ ஆம்ஸ்ட்ராங் கைது

விருதுநகர் அருகே பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.7000 லஞ்சம் வாங்கிய விஏஓ ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், மேல ஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சன். விவசாயியான இவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ரூ.10,000 கொடுத்தால்தான் பட்டா மாற்றித் தர முடியும் என கிராம நிர்வாக அலுவலர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். பின்னர் இறுதியாக ரூ.7000 தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார்.

விஏஓ

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் நாச்சன் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய பணத்தை நாச்சனிடம் கொடுத்து அனுப்பினர். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்ட அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுதலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ஆம்ஸ்ட்ராங்கிடம் ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த பூமிநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஏஓ

தற்போது லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே 2014-ம் ஆண்டு திருத்தங்கல்லில் பணியாற்றிய போதும் பட்டா வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அங்கே பணி செய்வதற்கான ஆணை வழங்கியே தற்போது பணியாற்றி வந்தார். ஆனால் ஆம்ஸ்ட்ராங் இரண்டாவது முறையாக லஞ்சம் வாங்கி கைதாகி உள்ளார்.