`வயலில் செருப்பு போட்டுக்கூட நடக்கமாட்டோம்; ஜே.சி.பி இறக்கி குழாய் பதிக்கிறாங்க!'- விவசாயிகள் வேதனை | Officials enters farm land with JCB and damaged corps, alleges Tanjore farmers

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (21/05/2019)

கடைசி தொடர்பு:18:30 (21/05/2019)

`வயலில் செருப்பு போட்டுக்கூட நடக்கமாட்டோம்; ஜே.சி.பி இறக்கி குழாய் பதிக்கிறாங்க!'- விவசாயிகள் வேதனை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், காவிரிப் பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தியும் தஞ்சாவூரில் வரும் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்துக் கட்சி சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள்

தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், சி.பி.எம் கட்சியின் மாவட்டச் செயலாளர்  நீலமேகம் தலைமையில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். `காவிரி வடி நில மாவட்டங்களைப் பாதுகாப்போம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிப்போம்' என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களைக் காக்கின்ற வகையில் போராடுவது குறித்து பேசப்பட்டது.

அனைத்துக் கட்சி சார்பில் நடந்த ஆலோசனை

காவிரிப் பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் ஒற்றை லைசென்ஸ் முறையில் மத்திய, மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் அனுமதி வழங்கியுள்ளன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா பாலைவனமாகும் என்கிற நிலையில், இந்த நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணியைத் தொடங்கிவிட்டன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் விவசாயம் அழிக்கப்படவும் மக்கள் வாழ்விழந்து வீதியில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனே இத்திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக பாரம்பர்யமிக்க காவிரிப் பாசனப் பகுதியின் விவசாயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தஞ்சாவூரில் வரும் ஜூன் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளோம்.

போராட்டம் குறித்து அறிவிப்பு

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படும் வரை தொடர் களப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் ஒன்றுபட்டுப் போராட திரள வேண்டும் எனக் கூட்டத்தில் தெரிவித்தனர். அவர்களிடம் பேசினோம். ``ஹைட்ரோ கார்பன் பணிக்காக நாகையில் நடவு செய்யப்பட்ட வயலில் ஜேசிபி இயந்திரத்தை இறக்கி குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்து வருகின்றனர். இதைக்கண்ட விவசாயிகள், டெல்டா மக்கள் அனைவருக்கும் நெஞ்சில் இடி இறங்கியதுபோல் உள்ளனர். வயலில் செருப்பு போட்டுக்கூட நடக்கமாட்டார்கள் விவசாயிகள். அந்த அளவுக்கு சோறு போடும் நிலத்தை தெய்வமாக மதித்து வருகின்றனர். விவசாயிகள் கடன் வாங்கி நடவு நட்டு வயலில் பயிர் பச்சை பசேல் என வளரத் தொடங்கியுள்ள நிலையில், இருந்த விளை நிலத்தைக் கூறு போட மத்திய அரசுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ எனத் தெரியவில்லை. இதை நினைத்து விவசாயிகள் விம்மி வருகின்றனர். இந்தத் திட்டத்தை உடனே கைவிட்டு விவசாயிகளையும் விளை நிலத்தையும் காக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்துவோம்'' என்று கொந்தளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க