வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த ஜெராக்ஸ் மிஷின்! - மதுரையில் திடீர் பரபரப்பு | electronic goods transported to Madurai vote counting booths, alleges DMK

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (21/05/2019)

வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த ஜெராக்ஸ் மிஷின்! - மதுரையில் திடீர் பரபரப்பு

மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி எலக்ட்ரானிக் மிஷின்கள் கொண்டுவந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

ஜெராக்ஸ் மிஷின்

மதுரை மருத்துவக் கல்லூரியில் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையமும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல எலெக்ட்ரானிக் பொருள்கள் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் எடுத்துவரப்பட்டதாக தி.மு.க உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர். இதனால் கொண்டுவரப்பட்ட எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் புகார் அளிக்க உள்ளதாக தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் சரவணன் கூறுகையில், ``திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் எந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வட மாநிலங்களில் சர்ச்சைகள் ஏற்படும் நிலையில், இங்கு இவ்வாறான நடவடிக்கைகள் மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து புகார் மனு அளிக்கவுள்ளோம்'' என்றார்.