`அரசு உதவினால் மட்டுமே முடியும்!' - சர்வதேச செஸ் போட்டிக்குத் தேர்வான புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி வீரர் | Pudukottai chess player seeks government's help over participating international tournament

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (21/05/2019)

கடைசி தொடர்பு:20:40 (21/05/2019)

`அரசு உதவினால் மட்டுமே முடியும்!' - சர்வதேச செஸ் போட்டிக்குத் தேர்வான புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி வீரர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த செஸ் வீரர் ஒருவர் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் பிரிவு சதுரங்கப் போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்து, ஐரோப்பாவில் நடைபெற உள்ள உலக அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் ஐரோப்பா செல்வதற்குப் போதிய நிதி கிடைக்காமல் தவித்து வருகிறார்.

புதுக்கோட்டை, லட்சுமி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அடைக்கலவன் என்பவரின் மகன் அங்கப்பன்(21). அங்கப்பனுக்குப் பிறவியிலேயே இடுப்புக்குக் கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்து போய்விட்டன. ஆனாலும், முடங்கிப்போகாமல் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் படிப்பிலும், விளையாட்டிலும் அசத்தி வருகிறார். திருச்சியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஒன்றில் சிஏ படித்து வருகிறார். மேலும், மாவட்ட, மாநில, தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்கப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒப்பன்-வீல்சேர் சதுரங்கப் போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அடுத்த மாதம் ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரையிலும் ஐரோப்பாவில் நடைபெற உள்ள உலக அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். இதில் பங்கேற்க இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற தமிழக வீரர்கள் 5 பேரில் அங்கப்பனும் ஒருவர். வீல் சேர் உதவியுடன் விளையாட்டிலும், படிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறார்.


அங்கப்பனிடம் பேசினோம். ``சித்தப்பாக்கிட்ட இருந்துதான் செஸ் விளையாட கத்துக்கிட்டேன். என்னை தனிமைப்படுத்தக்கூடாதென்று அவர் எனக்குச் சொல்லிக்கொடுத்துக்கிட்டு என்னோடு சேர்ந்து விளையாடுவாரு. விளையாடி, விளையாடி, செஸ் மேல விருப்பம் வரவே, இப்போ ஆறு வருஷமா முகமது அலி ஜின்னா மாஸ்டர்கிட்ட முறையா செஸ் விளையாட கத்துக்கிட்டு இருக்கேன். 6 வருஷத்துல 50-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில செஸ் போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கி இருக்கேன். 12 நேஷனல் கலந்து இருக்கேன். எப்படியாவது முதல் மூன்று இடங்களைப் பிடிச்சிருவேன். 12-வது படிச்சிக்கிட்டு இருக்கும்போது மத்தியப் பிரதேசத்தில், நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகிட்டேன். ஆனாலும், அப்போது, அங்க போவதற்குப் போதுமான பணவசதி இல்லாததால், அதில் கலந்துகொள்ள முடியாமலே போயிருச்சு. அந்தப் போட்டியில் கலந்துக்க முடியலையேங்கிற வருத்தம் ரொம்ப நாளா எனக்குள்ள இருந்துச்சு.

இப்போ, திருச்சியில் நடைபெற்ற 2019 நேஷனல்ல 3-வது இடம் பிடிச்சதால, வேல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காகப் பங்கேற்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. நிச்சயம் கலந்துகொண்டால் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன். ஆனால், ஐரோப்பா சென்று வருவதற்கு அதிகளவில் பணம் செலவாகும். அரசு உதவி செய்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். அரசு உதவி செய்யும் என்று காத்திருக்கிறேன்" என்கிறார்.

இந்த நிலையில், அங்கப்பனுக்கு உதவுவதற்காக புதுக்கோட்டையைச் சேர்ந்த `போப்ஸ்' என்ற ஓர் அமைப்பானது மொய் விருந்து நடத்தி அதில் வரும் தொகையை ஐரோப்பா செல்வதற்காகக் கொடுக்க உள்ளனர். அரசு உதவிக் கிடைக்காவிட்டாலும், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்தால், பொருளாதாரமின்றி, வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் கனவில் வெற்றி கண்டு வரும் நம்மூர் இளைஞர்களை நிஜ வெற்றியாளர்களாக மாற்ற முடியும்.