`சட்டப்பிரிவு 503, 504-ன் கீழ் நடவடிக்கை எடுங்கள்!' - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விழுப்புரம் எஸ்.பியிடம் ம.நீ.ம புகார் | MNM cadres files complaint against Rajendra balaji to Vilupuram SP

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (21/05/2019)

கடைசி தொடர்பு:21:23 (21/05/2019)

`சட்டப்பிரிவு 503, 504-ன் கீழ் நடவடிக்கை எடுங்கள்!' - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விழுப்புரம் எஸ்.பியிடம் ம.நீ.ம புகார்

`அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசியலமைப்புச் சட்டத்தின் 503, 504 பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசன்

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ``சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சோ” என்று கூறியிருந்தார். தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவில் எதிரொலித்த கமல்ஹாசனின் அந்தக் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல ``சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற விஷத்தைக் கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தின் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி

அந்தப் புகாரில், ``தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 13-ம் தேதி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்லின்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணியக் குறைவாகவும், வன்முறையைத் தூண்டி மிரட்டல் விடுக்கும் வகையிலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அமைச்சராக அவர் பதவியேற்றபோது இந்திய அரசியலமைப்பு மீது எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு முரணாக இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் கருத்து தெரிவிக்க உரிமை இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம்

அதனடிப்படையில்தான் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார். அதேபோல அந்தக் கருத்துக்குப் பதில் அளிப்பதற்கான சுதந்திரம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அனைத்துக் குடிமகன்களுக்கும் இருக்கிறது. ஆனால், தான் பொறுப்புமிக்கப் பதவியில் இருக்கிறோம் என்பதைக்கூட உணராமல் நாக்கை அறுப்பேன் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதனால் இந்திய தண்டனைச் சட்டம் 503 மற்றும் 504-ன்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க