5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி | Ooty flower show ended

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (22/05/2019)

கடைசி தொடர்பு:08:25 (22/05/2019)

5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி

ஊட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாள்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியில்  சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பர்ய உணவு தயாரித்து குறைந்த விலையில் வழங்கி அசத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள்.

ஊட்டி  அங்கன்வாடி பணியாளர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், இந்த ஆண்டுக்கான 123-வது மலர் கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. கண்காட்சியை முன்னிட்டு, 1.50 லட்சம் கார்னேஷன் மலர்களால் ஆன நாடாளுமன்றக் கட்டடத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு வண்ண மலர் கொண்டு அலங்காரங்கள், ரங்கோலிகள், செல்ஃபி ஸ்பாட் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 5 நாள்கள் நடைபெற்ற  இந்தக் கண்காட்சியை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துச் சென்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, ராஜ்பவன், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை சார்பில், சுமார் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

 மலர் கண்காட்சி


பழங்குடியின மக்கள்  அதிக அளவில் வாழும்  நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் இன்றளவும் தங்களின் பாரம்பர்ய உணவுகளை கடைப்பிடித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தாவரவியல் பூங்காவில் பாரம்பர்ய உணவுகுறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.  இதில் அங்கன்வாடி பணியாளர்கள், நீலகிரி மாவட்டத்தின் பாரம்பர்ய உணவு வகைகளை  சமைத்து, சுற்றுலாப் பயணிகளுக்குக் குறைந்த விலையில் வழங்கினர்.  நவதானிய உணவு, சிறு தானியங்கள், வறுத்த கோதுமை, சாமை உணவுகள், உப்பிட்டு, சத்துமாவு வடை, கீரை வகை போன்றவை பிரதானமாக இடம்பெற்றிருந்தன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், இலையினால் ஆன தட்டுகளைக்கொண்டு உணவுப் பொருள்களை விநியோகித்தனர்.

சுற்றுலாப் பயணிகள்

இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாங்கி சுவைத்து மகிழ்ந்ததுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற உணவு வகைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வழங்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றனர்.