ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்!- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள் | Lorry driver family suicide attempt, police investigation was on

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (22/05/2019)

கடைசி தொடர்பு:09:45 (22/05/2019)

ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்!- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கடன் தொல்லையால் லாரி டிரைவர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மனைவியும் மகனும் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சீனு, தனது 2 மகள்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

விஷம் குடித்த மனைவி

வந்தவாசியை அடுத்த பெரணமல்லூர் ஒன்றியம் இமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனு (வயது 32).  இவர், சொந்தமாக லாரி வைத்துள்ளார். லாரி வாங்கக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு  6 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டதால், கடன் தொகையைக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்ட டிரைவர் சீனு, தனது அண்ணன் மஞ்சுநாதனிடம் உதவி கேட்டுள்ளார். அவரும், ஒரு வாரம் கழித்து  ஒரு லட்சம் தருகிறேன் அதை முதலில் கொடு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

தற்கொலை முயற்சி

ஆனால், கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் இருந்த சீனு, பக்கத்து கிராமமான தெள்ளாரம்பட்டு ஏரி பகுதிக்குத்  தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டுபோய், பூச்சிக்கொல்லி மருந்தைக் குளிர்பானத்தில் கலந்து,  மனைவி விஜயலட்சுமி (வயசு 27), மகள் பிரதி ஸ்ரீ (வயது 12),  திவ்யதர்ஷினி (வயது 10), ரித்திக் ரோஷன்(05) ஆகிய நான்கு பேருக்கும் கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளார். ஐந்துபேரும் ஏரிக்கரையிலேயே மயங்கிக்கிடந்துள்ளனர். இந்நிலையில், தெள்ளாரம்பட்டு கிராம மக்கள் 100 நாள் வேலை செய்வதற்காக அவ்வழியாக வந்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையிலிருந்த ஐந்து பேரையும் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவர்களை  உடனடியாக மீட்டு கார் மூலம் சேத்துப்பட்டு புனித தோமையார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிகிச்சை பலனின்றி மகன் ரித்திக் ரோஷன் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் சீனு, பிரதி ஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மனைவி 

இந்தச் சம்பவம்குறித்து  தகவலறிந்து வந்த போளூர் டிஎஸ்பி பிரகாஷ்பாபு தலைமையில், சேத்துப்பட்டு காவல் நிலைய போலீஸார்  சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை செய்துவருகின்றனர்.
 கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்த சம்பவம்,  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க