அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி! | Kaniyakumari Medical college harassment issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (22/05/2019)

கடைசி தொடர்பு:11:06 (22/05/2019)

அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி!

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 11 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் காவலாளி கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் அமைந்துள்ளது. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சைபெற்றுவருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர், உள் நோயாளிகளாகவும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனையில், குழந்தைகள் பிரிவில் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் சூளையில் பணிபுரியும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை உடன் இருந்து கவனிக்க, வடமாநிலத்தைச் சேர்ந்த மானா என்ற பெண், மருத்துவமனையில் தங்கியுள்ளார். வடமாநிலப் பெண்ணின் 11 வயது மகளும் தாயுடன் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

விசாரணை

இந்த நிலையில், மருத்துவமனையில் காவலாளியாகப் பணிபுரிந்துவரும் சுபின் என்பவர், நேற்று இரவு குழந்தைகள் பிரிவில் சென்று 11 வயது பெண் குழந்தையிடம் குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார். தொடர்ந்து இரண்டுமுறை பெண் குழந்தையிடம் தண்ணீர் வாங்கிக் குடித்த காவலாளி, மூன்றாவது முறையாக தண்ணீர் கேட்பதுபோன்று சென்று அந்தப் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த குழந்தை, இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் செங்கல்சூளை உரிமையாளர்களிடம் சம்பவத்தைக் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர் .

 

சுபின்

விசாரணையில், சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பத்மாவதி என்ற நிறுவனத்தின் கீழ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் காவலாளியாக சுபின் பணிபுரிந்துவந்ததாகவும், இவர் கடந்த ஜனவரி மாதம் இங்கு பணியில் சேர்ந்ததாகவும், அவர்மீது காவல் நிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து,  காவலாளி சுபின் தலைமறைவாகிவிட்டார். அவரை காவலர்கள் இரவு கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்து கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதா விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் குமுதா கூறுகையில், "பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சைபெற்றுச் செல்லும் அரசு மருத்துவக் கல்லூரியில், காவலுக்கு 74 பேர் தனியார் அமைப்பு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், பெண் காவலாளிகள் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள்குறித்து முறையான விவரங்களைச் சேகரித்து, குற்றப் பின்னணியில் இல்லாத நபர்களை நியமித்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வாய்ப்புள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, சுபின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.