துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி! | One year of Gunfire incident, full police control in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (22/05/2019)

கடைசி தொடர்பு:11:31 (22/05/2019)

துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி!

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கான முதலாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரம் முழுவதும் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே 22-ம் தேதி மக்கள் நடத்திய 100-வது நாள் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தால் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இத்துயரச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. உயிரிழந்தோருக்கான அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுத்தநிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது நீதிமன்றம்.

பாதுகாப்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர், நீதிமன்ற உத்தரவின்படி மண்டபத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த உள்ளனர். ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய குமரெட்டியாபுரம், மடத்தூர், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், உயிரிழந்தவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அத்துடன், தி.மு.க, அ.ம.மு.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்துகின்றன. இதையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே, இந்நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய நபர்கள் 47 பேர்மீது 107 -வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

இன்றைய தினம் பாதுகாப்பிற்காக விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 ஏடிஎஸ்பி-க்கள், 28 டிஎஸ்பி-க்கள், 103 ஆய்வாளர்கள், 280 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2,300 போலீஸாரும், 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை  போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரை போலீஸார் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

பாதுகாப்பு கருதி, தூத்துக்குடி மாநகரத்தின் நுழைவுப் பகுதியில் காவல் துறை சோதனைச்சாவடி அமைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைப்பகுதி, சிப்காட் வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், அண்ணா நகர் மெயின் ரோடு பகுதி, மாதா கோயில், மீனவர்கள் வசிக்கும் பகுதி, போராட்டம் நடத்தப்பட்ட கிராமங்கள் என தூத்துக்குடி மாநகரம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியப் பகுதிகளில் கலவரத் தடுப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க