`எந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!' - சுப.உதயகுமாரன் | activist SP udayakumar arrested in nagercoil

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (22/05/2019)

கடைசி தொடர்பு:13:20 (22/05/2019)

`எந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!' - சுப.உதயகுமாரன்

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது போலீஸார் துப்பாகிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த சுப.உதயகுமாரன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

சுப உதயகுமாரன்

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி  100 நாள்களாகப் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். கடந்த ஆண்டு  மே 22-ம் தேதி நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன், போலீஸார் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறார்கள். இந்த நிலையில், அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப.உதயகுமாரன், இன்று நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவரிடம் பேசியபோது, ’’தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்திருந்தேன். அதற்காக, தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்நோலின் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். நானும் பச்சைத் தமிழகம் கட்சியின் நிர்வாகிகளும் செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். 

கோட்டாறு காவல்நிலையம்

ஆனால், நேற்று (21-ம் தேதி) இரவு நேரத்தில் எனது வீட்டுக்கு வந்த இரு காவல் துறை அதிகாரிகள், என்னை வீட்டுச் சிறையில் வைத்தனர். அதிகாலை 6 மணிக்கு என்னை அழைத்த அவர்கள், ’உங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துவரும்படி சொல்லியிருக்கிறார்கள். அதனால் உடனே புறப்பட்டு வாருங்கள்’ என்று சொல்லி, கோட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். 

என்ன வழக்குக்காக என்னை அழைத்துவந்திருக்கிறார்கள் என்பது பற்றி நான்கு மணி நேரத்துக்கு மேலாகியும் எனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. பச்சைத் தமிழகம் கட்சியின் குமரி மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியனையும் இதேபோல,  ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருக்கிறார்கள்.  இதுபோன்ற செயல்கள்மூலம் மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பை முடக்கிவிட முடியாது’ என்றார். 

கோட்டாறு காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே சுப.உதயகுமாரன் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும்,  அவர்மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.