`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு! | trying to open Sterlite after election result says director gowthaman

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (22/05/2019)

கடைசி தொடர்பு:07:01 (23/05/2019)

`தேர்தல் முடிவுக்குப்பிறகு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி'- கெளதமன் பகீர் குற்றச்சாட்டு!

``தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான வேலை மறைமுகமாக நடந்து வருகிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அப்படி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கும் நிலை வந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்” என பகீரைக் கிளப்பியுள்ளர் இயக்குநர் கெளதமன்.

கெளதமன்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின் நினைவுத் திருப்பலியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் கெளதமன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முத்துநகர் ரத்த சகதியான நாள்தான் மே 22-ம் தேதி. தூத்துக்குடி மண்ணை நச்சாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என பல்லாயிரக்கானவர்கள் அறவழியில் நடத்திய பேரணியில் வேதாந்தாவிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு அதிகார வர்க்கங்கள் ஈவு இரக்கமற்ற முறையில் மக்களை காக்கா, குருவி போல சுட்டுக்கொன்றார்கள்.

சுடச் சொன்னது யார் என இதுவரை சொல்லவில்லை. சுட்டவர்களுக்கு இதுவரை எந்தத் தண்டனையும் இல்லை. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையத்தின் விசாரணை ஓராண்டைக் கடந்தும் தற்போது வரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. இது மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம். மண்ணுக்குச் செய்யும் அநீதி. இதுவரை 13 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பிறகும் 3 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த உயிர்களுக்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டுமென்றால், எந்தக் காலத்திலும் ஸ்டெர்லைட் இயங்காது என்ற நிலையை அரசு அறிவிக்க  வேண்டும்.

கெளதமன்

ஒப்பாரி வைத்துள்ள மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த மண்ணைச் சிதைத்த வேதாந்தாவுக்கு கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக அனுமதி கொடுத்துள்ளது மத்திய அரசு. உடனடியாக, இந்த அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும். ஈழத்தில் நடந்த கொடுங்கோல் முறைதான் தமிழகத்தில் நடந்துள்ளது. இத்துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்காக 2500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தூத்துக்குடி மாநகரை காவல்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த ஆலையை மீண்டும் திறக்க  அனுமதிக்க மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான வேலை மறைமுகமாக நடந்து வருகிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அப்படி மீண்டும் ஸ்டெர்லைட்  ஆலை திறக்கும் நிலை வந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். அதன்பிறகு சில நாள்களிலேயே இந்த ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க