`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்?' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம் | dmk seeks apology from pmk founder dr.ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:15 (22/05/2019)

`இதை மட்டும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்?' - ராமதாஸ் குறித்து தி.மு.க ஆவேசம்

``தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேவையின்றி மறுவாக்குப்பதிவைத் திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற தி.மு.க-வும் அதன் தலைமையும் தர்மபுரி தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

ராமதாஸ்

அதில், ``தேர்தலில் எந்தத் தவறும் நடக்காத நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த வைத்ததன் மூலம் தர்மபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெயரைக் கெடுக்க வேண்டும் என்று தி.மு.க-வினர் செய்தி சதி அம்பலமாகியிருப்பது மட்டுமன்றி, தோல்வியும் அடைந்துள்ளது” என்று ராமதாஸ் கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், தி.மு.க அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அன்புமணி

தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ``தேர்தல்ல என்ன நடக்கும்? பூத்ல என்ன நடக்கும்? நம்ம தான் இருப்போம் பூத்ல... சொல்றது புரியுதா இல்லையா?” என்று நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிய உடனே திருப்போரூர் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியது யார்? தங்களின் மகன் அன்புமணி ராமதாஸ் தானே? இதன் உள்நோக்கம் என்ன? தர்மபுரி தொகுதியில் இதை அன்புமணியின் ஆட்கள் தேர்தல் அன்று கச்சிதமாக செய்து முடித்தனர். 

ஆர்எஸ்பாரதி

குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வாக்களிக்க முடியாத அளவுக்கு எல்லாவிதமான அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களின் வாக்குகளை அன்புமணி ராமதாஸ் ஆட்களே வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து வாக்குகளைப் பதிவு செய்தனர் என்பது ஊரறிந்த உண்மை. இதை அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக மறுக்க முடியாத காரணத்தால்தான், மறுவாக்குப்பதிவு நடைபெற்றது என்பதை டாக்டர் ராமதாஸ் ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறார், மறைக்கிறார்.


மறுவாக்குப்பதிவு நடந்த வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்கள் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் நாங்கள் எங்களுக்குரிய வாக்குகளைப் பதிவுசெய்தோம்’ என்று கூறினர். குறிப்பிட்ட பகுதி வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்த தி.மு.க-வைப் பற்றி எரிச்சலுடன் அறிக்கைவிடும் டாக்டர் ராமதாஸ், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் மறுவாக்குப்பதிவு கேட்காத பட்சத்தில், இரு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு செய்திட ஐம்பது மின்னணு இயந்திரங்களைக் கோவையிலிருந்து தேனிக்கு கொண்டுவந்ததைப் பற்றி கேள்வி கேட்க மறுப்பது ஏன்?

மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் டாக்டர் ராமதாஸும் அவரின் கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர தி.மு.க அல்ல” என்று கூறியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க