`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு!'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள் | bus stand collapse in ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:45 (22/05/2019)

`மேற்கூரையை மாத்துங்கன்னோம்; இப்படி நடந்துபோச்சு!'-அதிகாரிகளுக்கு எதிராக கொந்தளிக்கும் பயணிகள்

பேருந்து நிலைய மேற்கூரை மிகவும் மோசமாக உள்ளது என்று அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து டீக்கடை மாஸ்டர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இச்சம்பவம் அரங்கேறியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து நிலையம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்திலுள்ள முதல் கடையில் டீக்கடை உள்ளது. இந்த டீக்கடை எப்பொழுதும் பயணிகள் நிற்கும் இடமாகப் பரபரப்பாகக் காணப்படும். இந்தக் கடையில் மாஸ்டராக பணிபுரிபவர் கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன். இவர் இன்று கடையில் உள்ளே வடை போட்டுக்கொண்டிருந்தார்.

பேருந்து நிலைய மேற்கூரை

அப்போது திடீரென கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து சிமென்ட் காரைகள் பொலபொலவென பெயர்ந்து விழுந்தன. இதில் காரைகள் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய்ச் சட்டியில் விழுந்ததில் குருநாதன் மீது எண்ணெய் தெறித்தது. மேலும், சிமென்ட் காரைகளும் அவர்மீது விழுந்தது. எண்ணெய் பட்டதில் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதோடு, சிமென்ட் காரை விழுந்ததில் குருநாதன் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

குருநாதன் 

``இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. சில வருடங்களுக்கு முன்பாக இதே கடையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன அப்போது யாரும் உள்ளே இல்லாததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. அப்போதே இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடத்தைக் கட்டுங்கள் என்று கடை வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் இதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இவர்களின் அலட்சியத்தால் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கடைகளிலும் சேதமடைந்த பகுதிகளைக் கண்காணித்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே சீரமைப்பு பணிகளைச் செய்ய வேண்டும். உயிர்ப் பலி வாங்கும் முன் இந்தப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும்" எனப் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.