`கொள்கை முடிவு எடுக்க அரசு தயங்குவது ஏன்?' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் நல்லகண்ணு கேள்வி | Why the government is reluctant to decide the policy in the Assembly to permanently close the Sterlite says nallakannu

வெளியிடப்பட்ட நேரம்: 21:48 (22/05/2019)

கடைசி தொடர்பு:21:48 (22/05/2019)

`கொள்கை முடிவு எடுக்க அரசு தயங்குவது ஏன்?' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் நல்லகண்ணு கேள்வி

``ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனக் கூறும் தமிழக அரசு சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கத் தயங்குவது ஏன்?” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லகண்ணு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அப்போது, ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இத்துயரச் சம்பவத்தின் முதலாண்டு நினைவு அஞ்சலி தூத்துக்குடியில் இன்று அனுசரிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற கிராமங்கள், உயிரிழந்தவர்களின் இல்லங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது. இதேபோல, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்துகொண்டு, உயிரிழந்தவர்களின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.      

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்த மண்ணை நச்சாக்கி, நச்சுக்காற்றை பரப்பி பல்வேறு வித நோய்த் தொற்றுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி மக்கள் அமைதியாகப் போராடி வந்தார்கள். நானும் அந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். போரட்டத்தின் 100-வது நாளில், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக குழந்தைகள், பெண்கள் அமைதியாகச் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.  

குருவிகளைச் சுடுவதுபோல அந்த 13 அப்பாவிகளைச் சுட்டு வீழ்த்தினார்கள். மேலும், பலர் குண்டடியும், தடியடியும்பட்டு காயம் அடைந்தனர். மக்கள் மீது  வேண்டுமென்றே இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் நடக்காத ஒரு போர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மக்கள் மத்தியில் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்ற அச்ச உணர்வு தற்போதும் நிலவுகிறது. இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் நிலைப்பாடு. 

ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறும் தமிழக அரசு, சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கத் தயங்குவது ஏன்? எனவே, மக்களின் கோரிக்கைப்படி விரைவில் சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அத்துடன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக நினைவுச் சின்னமும் அமைக்கப்பட வேண்டும். ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை ஆலைக்கு எதிரான மக்களின்  போராட்டங்கள் அறவழியில் நடந்துகொண்டே இருக்கும்” என்றார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைப்போல, அ.ம.மு.க. ம.தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க