`உடம்புக்கு முடியலனாலும் தொழிலுக்கு வந்துடுவேன்...சைக்கிள் சர்வீஸ் செய்யும் மாற்றுத்திறனாளி #MyVikatan | This Differently abled person works in cycle shop with confident

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (23/05/2019)

கடைசி தொடர்பு:12:49 (23/05/2019)

`உடம்புக்கு முடியலனாலும் தொழிலுக்கு வந்துடுவேன்...சைக்கிள் சர்வீஸ் செய்யும் மாற்றுத்திறனாளி #MyVikatan

வாழ்க்கையில் வெல்வதற்குப் போராட வேண்டாம், தன்னம்பிக்கை இருந்தால் போதும் என்பதை நடைமுறை வாழ்வில் நிரூபித்து வருகிறார் மாற்றுத்திறனாளி பலராமன்.

மாற்றுத்திறனாளி பலராமன்
 

திண்டிவனம் அடுத்த ஒளவையார் குப்பத்தைச் சேர்ந்தவர் பலராமன். தனக்கு இரு கால்கள் செயலிழந்த நிலையில் பிறந்த போதிலும் மனம் தளர்ந்துவிடாது தன்னம்பிக்கையுடன் உழைத்து தன் குடும்பத்தையே உயர்த்தி வருகிறார். கூட்டேரிப்பட்டில் குடிநீர்த்தொட்டி அடிப்புறத்தில் சிரிப்பு முகத்துடன் சைக்கிளை பழுதுபார்த்துக்கொண்டிருந்த பலராமனிடம் பேசத் தொடங்கினோம்.
``எங்க அண்ணன்தான் எனக்கு குரு. `கைத்தொழில் ஒன்று கத்துக்க’ அப்படின்னு சொல்லி ஊக்கபடுத்தி உதவி செய்தார்.
நான் 2000-ல் இருந்து சைக்கிளை சர்வீஸ் செய்து கொடுத்து வரேன். அதோடு சைக்கிள் பஞ்சர், பைக் பஞ்சர்களையும் ஒட்டுவேன். என்னுடைய ஊர் ஒளவையார் குப்பம்.

மாற்றுத்திறனாளி பலராமன்
 

நான் பத்தாவது வரைதான் படித்தேன். படித்து முடித்ததும் இந்தக் கைத்தொழிலைக் கத்துகிட்டேன். அப்புறம் 13 வருடம் எங்க ஊரிலேயே சைக்கிளை வாடகைக்குக் கொடுத்துகிட்டும், சர்வீஸ் செய்துகிட்டும் இருந்தேன். அப்புறம் திருமணம் ஆனது. இரண்டும் பெண் பிள்ளைகள். என்னுடைய ஊர், கிராமம் என்பதால் என் தொழிலைகொண்டு குடும்பத்தை நடத்திச் செல்ல அவ்வளவாக வருமானம் இல்லை. அதனால் இந்தத் தண்ணீர்த் தொட்டிக்குக் கீழ் சுமார் 7 வருஷமா இந்தத் தொழில் செஞ்சுகிட்டு வரேன்.
ஒரு சைக்கிளை முழுவதுமா சர்வீஸ் பண்ணணும்னா 200 ரூபாய் வாங்குவேன். ஒரு பஞ்சர் ஒட்டுனா 20 ரூபாய் வாங்குவேன்.
சைக்கிள் சர்வீஸ் பண்ண 300 ரூபாய் வரை சில கடைகளில் வாங்குவாங்க.

நாம இருக்கிற நிலைமைக்கு விலை குறைத்து செய்தால் மக்கள் வருவார்கள் என்று நினைத்தாலும் வரவு குறைவுதான்.
என்னுடைய பெரிய பொண்ணு ஒன்பதாவது போறாங்க, சின்ன பொண்ணு ஆறாவது போறாங்க, மனைவி வீட்டில இருக்காங்க. இவங்க மூணுபேரும் நான் சம்பாதிப்பதை நம்பிதான் இருக்காங்க. அதனால, உடம்புக்கு முடியலனாலும் தொழிலுக்கு வந்துடுவேன். எனப் பேசி முடித்தார் பலராமன்.

தன் அறிவுத்திறனைச் சோதிக்கும் பள்ளி, கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றாலே மனம் தளர்ந்து சோர்ந்துவிடும் இன்றைய இளைஞர்கள் மத்தியில். தான் நடக்க இயலாத மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், தன்னுடைய தன்னம்பிக்கையான உழைப்பில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி, தன் இரு மகள்களைப் படிக்க வைக்கும் இவர் இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் மனிதர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.