தினகரனை நம்பி ஷாக்கான ஸ்டாலின்! - தேர்தலில் எடுபடாத ஃபார்முலா  | election results 2019

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (23/05/2019)

கடைசி தொடர்பு:14:15 (23/05/2019)

தினகரனை நம்பி ஷாக்கான ஸ்டாலின்! - தேர்தலில் எடுபடாத ஃபார்முலா 

ஸ்டாலின் எதிராக ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.

அ.தி.மு.க-வின் ஓட்டுகளை நிச்சயம் டி.டி.வி.தினகரன் பிரிப்பார். அதனால் ஆட்சியைப்பிடித்துவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்தார். ஆனால் தினகரன், வேட்பாளர்கள் சில தொகுதிகளில் டெபாசிட் வாங்கவே போராடிவரும் சூழல் உள்ளது. 

இந்தத் தேர்தலில், பெரிய அளவில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டி என்ற நிலையில்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை டி.டி.வி.தினகரன் களமிறக்கினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி அமைத்து, மத்திய சென்னையில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியைப்போல அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என தினகரன் நம்பினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர், ஆளுங்கட்சியையும் பா.ஜ.க-வையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாகச் சாடினார். இதனால், தி.மு.க-வின் பி.டீம் என்று டி.டி.வி.தினகரனை ஆளுங்கட்சியினர் விமர்சித்தனர். 

அ.தி.மு.க-வின் ஓட்டுகள் தினகரனால் அதிக அளவில் சிதறும் என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்தனர். அது, நமக்கு சாதகமாக அமையும் என்றுதான் தி.மு.க-வினர் கணக்குப் போட்டனர். ஆனால், தேர்தல் முடிவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை. 

  ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகித்தாலும், இடைத்தேர்தலில் எதிர்பார்த்த இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், மூன்றாவது அல்லது நான்காது இடத்தில் உள்ளனர். பூந்தமல்லி தொகுதியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வான ஏழுமலை, மூன்றாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது சுற்று முடிவில் அவருக்கும் முதல் இடத்திலிருக்கும் தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கும் இடையே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசம் உள்ளது. இதனால், பூந்தமல்லி தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சோர்வடைந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஃபார்முலாவைப்  பயன்படுத்தி வெற்றிபெற்றதுபோல, தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர் அ.ம.மு.க-வினர். குறிப்பாக, தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் மீது அதிக நம்பிக்கையில் இருந்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், அந்தத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முன்னிலையில் இருந்துவருவது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் பிரசாரத்தின்போது,  தினகரனுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியதால் அ.ம.மு.க-வுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அந்தக் கட்சியினர் கருதினர். ஆனால், தேர்தல் முடிவுகள் டி.டி.வி.தினகரனுக்கும் அ.ம.மு.க-வினருக்கும் பாதகமாக அமைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஸ்டாலின் எதிராக .தினகரன்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் சிலர், தேர்தல் முடிவைப் பார்த்து கண்ணீர்விடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தினகரனை நம்பி வந்ததுக்கு கிடைத்த தண்டனையா இது என்று மனசுக்குள் புலம்பியபடி உள்ளனர். ஏற்கெனவே, ஆளுங்கட்சியினருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பினருக்கும் தொகுதிக்குள் முட்டல் மோதல் இருந்துவந்தது. தேர்தல் முடிவுக்குப் பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து பலர் தாய் கழகத்துக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து இதே நிலை நீடித்தால், சில தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க கூட்டணிக்கு மக்களவைத் தொகுதியில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததாலும், இடைத்தேர்தலின் முன்னணி நிலவரம், ஸ்டாலினுக்கு ஷாக் அளிக்கும் வகையில் உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.  இடைத்தேர்தலில், 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தேர்தல் கணக்கு போட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதனால், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருப்போம் என்று கூறியுள்ளார். 

இந்தத் தேர்தலில், அ.தி.மு.க-வின் ஓட்டுகள் தினகரனால் சிதறும். அதன்மூலம் தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருந்த ஸ்டாலின், தேர்தல் முடிவுகள் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைய உள்ளதால், அ.தி.மு.க ஆட்சி எந்தவித  தடையுமின்றி தொடர வாய்ப்புள்ளது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 மோடி எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம்

காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகம், கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் பாடம் கற்பித்துள்ளது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிமுகத்தில் இருந்தாலும், சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் மட்டும் காலை முதல் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி முகத்தில் இருந்தாலும், தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுவதால், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. 

தேர்தல் முன்னணி நிலவரத்தை மட்டும் வைத்து இறுதிமுடிவு செய்துவிட முடியாது. தேர்தல் முடிவு வெளியாகட்டும். சூழல் மாறும் என்ற நம்பிக்கையில் தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும் உள்ளனர். குறிப்பாக, இடைத்தேர்தலின் முடிவில் தி.மு.க-வை விட அதிக தொகுதிகளில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அ.தி.மு.க-வினர். 

ஜெயலலிதா இல்லாமல் சந்தித்த இந்தத் தேர்தல் முடிவு மூலம், அ.தி.மு.க தலைமை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதிகம் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில், 'லேடியா... மோடியா?' என்று பேசினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் காட்சிகள் மாறிவிட்டன. ஆனால், பா.ஜ.க-வின் தயவால் ஆட்சி மாறவில்லை.