1,48,689 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!- தமிழிசையைச் சாய்த்த கனிமொழி | Kanimozi continuous leading on thoothukudi constituency

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (23/05/2019)

கடைசி தொடர்பு:15:19 (23/05/2019)

1,48,689 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!- தமிழிசையைச் சாய்த்த கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை முன்னிட்டு தூத்துக்குடியில் தி.மு.கவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி, கடந்த 2008-ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, திருச்செந்தூர் தொகுதி நீக்கப்பட்டு தூத்துக்குடி தொகுதியாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தலா ஒரு வெற்றியைக் கைப்பற்றிருக்கிறது. கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க வேட்பாளரான ஜெயசிங் நட்டர்ஜி வெற்றி பெற்றார்.

 திமுகவினர் உற்சாக நடனம்

தற்போதைய தேர்தலில் தி.மு.க சார்பாக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழியும், பா.ஜ.க சார்பாக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். தமிழகத்தில் இரு பெண் வி.ஐ.பி-கள் மோதும் தொகுதி என்பதால் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தூத்துக்குடி பார்க்கப்பட்டது. தற்போது நடைபெற்து வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் 36 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

 திமுகவினர் பட்டாசு வெடித்துக்கொண்டாட்டம்

தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 10வது சுற்று நிலவரப்படி, தி.மு.க வேட்பாளர் கனிமொழி 2,36,032 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் 87,343 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் புவனேஷ்வரன் 15,452 வாக்குகளும் பெற்றுள்ளனர். 1,48,689 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் இருக்கிறார். தபால் ஓட்டு எண்ணிக்கை முதல் தற்போதுவரை கனிமொழி முன்னிலையில் இருப்பதால் தி.மு.க தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

உற்சாகத்தில் கீதா ஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகம் முன்பு தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே போல, அ.தி.மு.கவின் கோட்டை எனச் சொல்லப்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க