`இந்த நிலைமைக்கு யார் காரணம்...!'- தமிழிசைக்கு வேட்டு வைத்தாரா அமைச்சர்? | Tamilisai trails in Thoothukudi constituency

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (23/05/2019)

கடைசி தொடர்பு:15:45 (23/05/2019)

`இந்த நிலைமைக்கு யார் காரணம்...!'- தமிழிசைக்கு வேட்டு வைத்தாரா அமைச்சர்?

தமிழிசையை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி முகத்தில் உள்ளார். தமிழிசைக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று ஆராயத் தொடங்கிவிட்டனர் பா.ஜ.க.வினர். 

 தூத்துக்குடி தொகுதியில் ஸ்டெர்லைட் விவகாரம் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கினார். எம்.பியாக இருந்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் கிராமத்தை தத்தெடுத்து தேர்தலுக்கான முன்ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்திருந்தார். ஸ்டெர்லைட்டை மனதில் வைத்துக்கொண்டு கூட்டணி கட்சியான பா.ஜ.கவுக்கு தூத்துக்குடியை அ.தி.மு.க. விட்டுக்கொடுத்தது. தமிழிசையும் கனிமொழியும் போட்டியிட்டதால் தூத்துக்குடியும் நட்சத்திரத் தொகுதியானது. 

 தமிழிசையை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். அதோடு தூத்துக்குடியில் தமிழிசை வெற்றி பெற அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் சண்முகநாதனையும் அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் மாவட்டச் செயலாளர்களாக நியமித்து, தேர்தல் பொறுப்புகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 தூத்துக்குடியில் கனிமொழி தோல்வியடைந்தால் ஸ்டாலினிடம் பதில் சொல்ல முடியாது என்று தி.மு.க.வினர் கடுமையாக உழைத்தனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னெடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தொகுதியின் தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. மேலிடத்திலிருந்து சிறப்பு நிதியும் வந்தது. 

தமிழிசை பிரசாரம்

இதனால் பா.ஜ.க., கொடுத்த தேர்தல் செலவுக்கான நிதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தமிழிசைக்குக் கிடைத்த ஓட்டுகளைப் பார்க்கும் அந்த நிதி சரியாகச் செலவிடப்படாமல் குறிப்பிட்ட சிலரால் பதுக்கப்பட்டுவிட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க.வினர், ``டெல்லியிலிருந்து தூத்துக்குடி தேர்தல் செலவுக்காக சில `சி'க்கள் வந்தன. அந்த `சி'க்களை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களுக்கு சமமாகப் பிரித்துக்கொடுக்கப்பட்டது. அந்த நிதியை மட்டும் சரியாகச் செலவு செய்திருந்தால் நிச்சயம் கூடுதல் ஓட்டுகள் தமிழிசைக்குக் கிடைத்திருக்கும். 

தூத்துக்குடி தொகுதியில் ஆரம்பத்திலிருந்த சூழல், ஓட்டுப்பதிவின் போது மாறிவிட்டது. இதனால், தமிழிசைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தை அ.தி.மு.க.வினர் சரியாக செலவு செய்யவில்லை. மேலும் முழுமனதோடு தேர்தல் பணியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. இதுதான் தமிழிசை பின்னடைவுக்கு முக்கிய காரணம். இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளில் தமிழிசைக்கு 80 ஆயிரத்துக்கு மேல் ஓட்டுகள் கிடைத்துள்ளன. 

தமிழிசையை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் உள்ள பூத்களில் தமிழிசைக்குக் கிடைத்த ஓட்டுகளை அ.தி.மு.க. தலைமை ஆய்வு செய்ய வேண்டும். குறைவான ஓட்டுகள் கிடைத்த பூத்களின் பொறுப்பாளர்களிடம் அ.தி.மு.க. தலைமை விளக்கம் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். அப்போதுதான் யார், யார் தேர்தல் பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்பது தெரியவரும். இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமையிடமும் புகார் தெரிவிக்கவுள்ளோம்'' என்றனர். 

தூத்துக்குடி அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ``தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. விரும்பியதும் நாங்கள் அந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்தோம். கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டோம். எங்களின் ஓயாத தேர்தல் பணிகளால்தான் தமிழிசைக்கு இந்தளவுக்கு ஓட்டுகள் கிடைத்துள்ளன. தொகுதியில் நிலவிய எதிர்ப்பலைகளும், ஐ.பி. ரிப்போர்ட்டும் பா.ஜ.க. தலைமைக்கு நன்றாகவே தெரியும். பூத் வாரியாக கணக்குப்பார்க்க விரும்பினால் தாராளமாகப் பார்க்கக்கட்டும்'' என்றனர். 

தேர்தல் நிதியைச் சரியாக நீங்கள் செலவழிக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, `அது தவறு' என்று தூத்துக்குடி மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறினார்.