``எங்கள் தோல்வியைவிட தினகரனின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறோம்!" - நிர்மலா பெரியசாமி | Nirmala Periyasamy talks about ADMK's loss in Lok Sabha Polls

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (23/05/2019)

கடைசி தொடர்பு:16:42 (23/05/2019)

``எங்கள் தோல்வியைவிட தினகரனின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறோம்!" - நிர்மலா பெரியசாமி

"இந்தத் தோல்வி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்துக்குக் கிடைத்த தற்காலிக வெற்றிதான். எங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் தோல்வி கிடைத்திருக்கிறது. ஆனால், எங்கள் கூட்டணியும், நட்பும் தொடரும்."

``எங்கள் தோல்வியைவிட தினகரனின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறோம்!

த்தியில் மீண்டும் பி.ஜே.பி, ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் பி.பி-ஐ எகிற வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. ஆனால், `உனக்கும்... எனக்கும்' என இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.முக மற்றும் தி.மு.க கட்சியினருக்கு உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் மாறி மாறி ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமியிடம் பேசினோம்.

பிரதமர் மோடி

``தேர்தல் முடிவுகள் வெளியானதும், `வட போச்சே' என எதிர்க்கட்சிகள் கவலைப்படுவார்கள் எனச் சொல்லியிருந்தீர்களே..."

``இப்போதும் அதையேதான் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால், என்ன பயன்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்து, அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கலாம். முன்புபோல மீண்டும் கொள்ளையடிக்கலாம் என்றுதான் தி.மு.க நினைத்தது. ஆனால், அவர்கள் எண்ணம் இப்போது நிறைவேறப்போவதில்லை."

``உங்கள் கட்சிக்குக் கிடைத்திருக்கும் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு முக்கியம்தான். ஆனால், அதைவிட 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றிதான் எங்களுக்குக் கூடுதல் முக்கியம். அதற்காகக் கடுமையாக உழைத்தோம். ஜெயலலிதா அம்மா இல்லாத சூழலில், எங்கள் கட்சியில் பிளவுகள் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்தார்கள். அதையெல்லாம் மீறி, மீண்டும் எடப்பாடி அண்ணனின் ஆட்சி தொடர மக்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்." 

நிர்மலா பெரியசாமி

``ஆட்சியைத் தக்கவைக்கும் அளவுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என நினைக்கிறீர்களா?"

``நிச்சயமாக நம்பிக்கை உண்டு. இப்போதுவரை 10 - 12 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் இறுதி முடிவுகளும் இருக்கும். எனவே தற்போதைய எங்கள் ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது." 

``தமிழகத்தில் பா.ஜ.க உடனான உங்கள் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தானே தற்போதைய முடிவுகள் வெளிப்படுத்துகின்றன?"

``இந்தியாவில் பெரும்பாலான மாநில மக்கள் பிரதமர் மோடி அரசின் ஆட்சி தொடரவே ஆதரவு அளித்திருக்கிறார்கள். பிரதமர் மோடி கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆனால், அதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தெரியாத வகையில், பொய்ப் பிரசாரம் செய்து எதிர்க்கட்சிகள் சதிசெய்தார்கள். மக்களை நன்கு குழப்பிவிட்டிருந்தனர். எனவே, மௌனப் புரட்சியைத் தமிழக மக்கள் மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு. இதனால் மக்களுக்கும் தமிழகத்துக்கும் பெரிதாக எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதேசமயம் எங்கள் கட்சியில் மாநிலங்களவை எம்.பி.க்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள்."

டி.டி.வி.தினகரன்

``டி.டி.வி தினகரன் கட்சியின் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``எங்கள் ஆட்சித் தொடரக் கூடாது என எதிர்க்கட்சிகளுடன் மறைமுகக் கூட்டு வைத்துச் செயல்பட்டவர், டி.டி.வி.தினகரன். அவரின் அ.ம.மு.க கட்சிக்கு மக்கள் மகத்தான தோல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றன. அதேவேளையில், தினகரன் கட்சியின் படுதோல்வி எங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. எங்கள் தோல்வியைவிட அவரின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறோம்!"

``உங்கள் கூட்டணியில் இருந்த மற்ற எந்தக் கட்சிகளுக்குமே வெற்றி கிடைக்காது போலிருக்கிறதே?"  

``மீண்டும் சொல்கிறேன். இந்தத் தோல்வி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்துக்குக் கிடைத்த தற்காலிக வெற்றிதான். எங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் தோல்வி கிடைத்திருக்கிறது. ஆனால், எங்கள் கூட்டணியும், நட்பும் தொடரும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எங்கள் சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதிப்போம்."


டிரெண்டிங் @ விகடன்