`என்ன நடக்கிறது சிதம்பரத்தில்?'- முகம் சிவந்தபடியே வெளியேறினார் திருமாவளவன் | thirumavalavan trails in Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (23/05/2019)

கடைசி தொடர்பு:16:49 (23/05/2019)

`என்ன நடக்கிறது சிதம்பரத்தில்?'- முகம் சிவந்தபடியே வெளியேறினார் திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முகம் சிவந்த படியே வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார்.

 திருமாவளவன்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம் மக்களவைத் தொகுதி. இத்தொகுதியில் 77.71 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவி பேட் இயந்திரம் அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள எம்ஆர்சி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி துணை ராணுவப் படை மற்றும் காவல்துறை சார்பில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 200 மீட்டருக்குள் பொதுமக்கள் கூடவோ வெடிகளை வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ள காவல்துறை அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் திருமாவளவன்

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதையடுத்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள தலா 5 வாக்குச்சாவடிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும்.
இந்த நிலையில் மூன்று கட்டச் சுற்றுகள் அதிகார பூர்வமாக வெளிவந்திருக்கிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளரோடு ரிசல்ட் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், ஒவ்வொரு ரவுண்டுகளிலும் அ.தி.மு.க வேட்பாளார் அதிகமாக வாக்குவாங்கியதால் முகம் சிவந்த படியே வெளியேறினார். தற்போது 9400 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார் திருமாவளவன்.