`எப்படி தோத்தோமுன்னு தெரிஞ்சா சொல்லிடுவனே...!' - ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர் கலகல | Erode Admk candidate speaks about election trends

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:46 (23/05/2019)

`எப்படி தோத்தோமுன்னு தெரிஞ்சா சொல்லிடுவனே...!' - ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர் கலகல

`கொங்கு மண்டலத்தில் குறிப்பாக, ஈரோட்டில் நாங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது' என அ.தி.மு.க-வினர் ஹைடெசிபலில் அலறி வந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகளோ, அ.தி.மு.க-வின் நம்பிக்கைகளைத் தூள் தூளாக உடைத்தெரிந்திருக்கிறது.

தேர்தல்

ஈரோடு மக்களவைத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரான ஜி.மணிமாறனைவிட, தி.மு.க கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி கிட்டத்தட்ட 1,50,000 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று ஏறுநடை போட்டு வருகிறார்.

காலையிலிருந்தே வாக்கு எண்ணும் மையத்தில் தனியாக உட்கார்ந்து கள நிலவரங்களைக் கவனித்து வந்த அ.தி.மு.க வேட்பாளரான மணிமாறன், ஒருகட்டத்தில் இனிமேலும் இங்கிருக்கலாகாது என நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

தேர்தல்

வேர்க்க விறுவிறுக்க பொடிநடையாய் நடந்து சென்ற அ.தி.மு.க வேட்பாளர் மணிமாறனிடம் பேசினோம். ``நான் தோத்துட்டேன்னு நினைச்சு மன வருத்தப்படலைங்க. மத்தியில மறுபடியும் எங்களுக்கு ஆதரவான மோடி ஆட்சிதான் வந்துருக்கு. தமிழ்நாட்டுல நாங்க மக்களவைத் தேர்தலில் பெருசா ஜெயிக்காமல் போனாலும், எங்களுடைய ஆட்சி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும். மத்திய மோடி அரசு மூலம் பல நல்ல திட்டங்களை நாங்கள் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தருவோம்'' என்றவரிடம், ``ஈரோட்டில் அ.தி.மு.க எப்படி தோற்றது... குரூப் பாலிட்டிக்ஸ் காரணமா?'' எனக் கேட்க, ``நாங்க ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்போமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, அப்படியே ரிவர்ஸ்ல ஒரு லட்சம் ஓட்டு பின் தங்கியிருக்கோம். எப்படி தோத்தோமுன்னு எங்களுக்கே தெரியலை. தெரிஞ்சாதான் இந்த காரணமுன்னு நான் சொல்லிடுவனே. மத்தபடி குரூப் பாலிட்டிக்ஸ் எல்லாம் இல்லைங்க. நான் இன்னும் வளரணும்னு நினைக்கிறேன். நீங்க விட மாட்டீங்க போலயே!'' என்றார்.