`வெளிநடப்பு செய்யும் தி.மு.கவிற்கு மக்கள் வாக்களித்தது வருத்தமளிக்கிறது!' - தமிழிசை | Tamilisai speaks about election trends

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:49 (23/05/2019)

`வெளிநடப்பு செய்யும் தி.மு.கவிற்கு மக்கள் வாக்களித்தது வருத்தமளிக்கிறது!' - தமிழிசை

``தமிழகத்தில் தி.மு.க பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி அல்ல. தி.மு.கவின் வெற்றி, தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பலனிக்காது.
சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநடப்பு செய்வதைப்போல, நாடாளுமன்றத்திலும் தி.மு.க எம்.பி.க்கள்  வெளிநடப்புதான் செய்வார்கள்" எனத் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான ஆட்சி அமையப் போவது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் மேலும் தொடர வேண்டும், நாடு மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக நாட்டு மக்கள் பா.ஜ.கவிற்கு வாக்களித்துள்ளனர். வாக்களிக்காதவர்கள் கண்டிப்பாக அதை உணருவார்கள். தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல திட்டங்களை மறந்துவிட்டு மற்ற கட்சியினரின் தவறான பிரசாரத்தின் மூலம்தான் மக்கள் இந்த வாக்குகளைக் கொடுத்துள்ளனர்.

தொங்கு பாராளுமன்றமாக அமையாமல் தனி மெஜாரிட்டியாக அமைந்ததன் காரணமாக நல்ல பல திட்டங்களை இந்தியாவில் பா.ஜ.கவால் செயல்படுத்த முடியும். மற்ற மாநிலங்களில் அதிக வாக்குகள் பெற்ற பா.ஜ.கவால், தமிழகத்தில் ஏன் வாக்குகளைப் பெற முடியவில்லை என்பது குறித்து ஆத்ம பரிசோதனை செய்து மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்வோம்.

தூத்துக்குடி தொகுதியில் எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில், மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பிரசாரத்தில் சொன்னது போல, இந்தத் தொகுதியில் எனது மக்கள் பணி நிச்சயம் தொடரும். தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை என்ற ஆதங்கத்தை விட, தமிழகத்திற்கு உரிமையோடு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என நினைத்தோம். தற்போது அந்த உரிமையை மக்கள் கொடுக்கவில்லையே என்ற வருத்தம்தான் உள்ளது. 

மக்களிடம் பொய் பிரசாரங்களைக் கொண்டு சென்று தி.மு.கவினர் வெற்றியடைந்துள்ளார்கள். தமிழகத்தில் தி.மு.க பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி அல்ல. தி.மு.கவின் வெற்றி, தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பலனிக்காது. அது தலைவலியாகதான் மாறும். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநடப்பு செய்வதைப்போல, நாடாளுமன்றத்திலும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்புதான் செய்வார்கள். அதைத் தவிர வேறொன்றும் கிடையாது, மக்கள் மிகுந்த வருத்தப்படுவார்கள்.

மோடி தலைமையிலான ஆட்சியால் மக்களுக்கு நல்லதைச் செய்ய வருகிறோம். ஊழலற்ற திட்டங்களை தருகிறோம், தமிழக மக்களும் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் வரும். பா.ஜ.க என்றைக்கும் புற வழியாகச் செல்லமாட்டோம், கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தில் நேர்வழியாக ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க