`மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை என்ற கவலை இல்லை!' - வசந்தகுமார் சர்ச்சை பேட்டி | vasanthakumar's controvery speech over congress government

வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (23/05/2019)

கடைசி தொடர்பு:20:34 (23/05/2019)

`மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை என்ற கவலை இல்லை!' - வசந்தகுமார் சர்ச்சை பேட்டி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை என்ற கவலை இல்லை என கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வசந்தகுமார்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் இரண்டு லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இந்தநிலையில் கோணத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த ஹெச்.வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``என்னை வேட்பாளராக அறிவித்த ராகுல் காந்திக்கும். என்னை வெற்றிபெற வைத்த கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக இருந்து சேவையை கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தேன் ஆராய்ச்சி, ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டுவருவேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை என்ற கவலை இல்லை. வருத்தம் இருந்தாலும், குமரி மாவட்ட மக்களுக்கான பணியை அது பாதிக்காது.

வசந்தகுமார்

குமரி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசுவேன். தோல்விக்கு என்ன காரணம் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி ஆலோசிக்கும். மோடி பி.ஜே.பி-க்கு மட்டும் பிரதமர் இல்லை. எனவே, தமிழ்நாட்டின் நலன் கருதி பிரதமர் செயல்பட வேண்டும். தமிழகத்தின் நலன் கருதி ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்போம்" என்றார். தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்றும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத சோகத்தில் தொண்டர்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.