ரங்கசாமியின் கோட்டையைத் தகர்த்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணி! | Congress - DMK coalition leads in Puducherry byelection

வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (23/05/2019)

கடைசி தொடர்பு:21:17 (23/05/2019)

ரங்கசாமியின் கோட்டையைத் தகர்த்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணி!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதற்காக புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த அசோக் ஆனந்தின் பதவி பறிபோனது. காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியுடன் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் அக்காள் மகன் நெடுஞ்செழியனும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியுடன் தி.மு.க சார்பில் வெங்கடேசனும் போட்டியிட்டனர்.

ரங்கசாமி

அதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் கௌரியும், அ.ம.மு.க சார்பில் முருகசாமியும் போட்டியிட்டனர். இன்று காலை புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு தொழில்நுட்பக்கல்லூரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் இருந்தே முன்னணியில் இருந்தார் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன். முதல்சுற்றில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 4,945 வாக்குகளையும். தி.மு.க வேட்பாளர் 4,773 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளரி 496 வாக்குகளையும், அ.ம.மு.க வேட்பாளர் முருகசாமி 104 வாக்குகளையும் பெற்றனர்.

தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன்

தொடர்ந்து 2 மற்றும் 3வது சுற்றுக்களில் தி.மு.க வேட்பாளரே முன்னணியில் இடம்பெற்றார். இறுதிச் சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனைவிட 1,539 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன். முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் கோட்டைகளில் ஒன்றாகப் பேசப்பட்டது தட்டாஞ்சாவடி தொகுதி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்றார் என்பதே அதற்கு சாட்சி. ஆனால், சொல்லிக்கொள்ளும்படி இந்தத் தொகுதியில் வாக்கு வங்கிகளையோ, தொண்டர்களையோ வைத்திருக்காத தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெற்ற வாக்குகள்:

தி.மு.க            - 10,960

என்.ஆர்.காங்கிரஸ் – 9,367

நாம் தமிழர்     - 1,084

நோட்டா          - 653

நீங்க எப்படி பீல் பண்றீங்க