`இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்' - ட்விட்டரில் கொந்தளித்த தமிழிசை! | tamilisai angry tweet about lok sabha election result

வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (23/05/2019)

கடைசி தொடர்பு:20:51 (23/05/2019)

`இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்' - ட்விட்டரில் கொந்தளித்த தமிழிசை!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேசிய அளவில் பா.ஜ.க முன்னிலை வகித்தாலும் தமிழகத்தில் இருந்த ஒரு சீட்டையும் இழந்துள்ளது. கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் என அனைவரும் தோல்வி முகத்தில் உள்ளனர். இதேபோல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி முகத்தில் உள்ளார். 

தமிழிசை

தோல்வி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை, ``தமிழகத்தில் தி.மு.க பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி அல்ல. தி.மு.க-வின் வெற்றி, தமிழகத்துக்கு எந்த விதத்திலும் பலனிக்காது. அது தலைவலியாகதான் மாறும். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநடப்பு செய்வதைப்போல, நாடாளுமன்றத்திலும் தி.மு.க எம்.பி-க்கள் வெளிநடப்புதான் செய்வார்கள். அதைத் தவிர வேறொன்றும் கிடையாது, மக்கள் மிகுந்த வருத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார். 

தமிழிசை

இந்த நிலையில், தமிழிசையின் தோல்வி குறித்து அவரை டேக் செய்து, ``தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை தூத்துக்குடி உப்பு" என ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த தமிழிசை, ``உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும்; உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இதயநோய் வரும். உங்கள் குடும்ப டாக்டரைக் கேட்டால் உண்மை புரியும். இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க