`ஆட்சி மாற்றம் இல்லை; ஸ்டாலினின் கருத்து பொய்த்துப் போய்விட்டது!' - கடம்பூர் ராஜு | Minister Kadambur raju speaks about election results

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (23/05/2019)

கடைசி தொடர்பு:21:53 (23/05/2019)

`ஆட்சி மாற்றம் இல்லை; ஸ்டாலினின் கருத்து பொய்த்துப் போய்விட்டது!' - கடம்பூர் ராஜு

``தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறிவந்த கருத்து இன்று பொய்த்துவிட்டது'' என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

கடம்பூர் ராஜூ

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க வேட்பாளர்  சின்னப்பன் 70,139 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமார் 41,585 வாக்குகளும், சுயேச்சையாக களம் இறங்கிய அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் மார்கண்டேயன் 27,456 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் ஜோதிமணி 9,695 வாக்குகளும் பெற்றனர். இதில், அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன்  28,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றி பெற்ற சான்றிதழ் பெறுவதற்காக வேட்பாளர் சின்னப்பனுடன், தூத்துக்குடி அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியிலும்,  மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல கட்சியினர் சொல்லி வந்தார்கள். 

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்மறைக் கருத்துகளைத்  தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்கள். ஆனால், அது இன்று பொய்த்துவிட்டது. கடந்த முறையைவிட தற்போது பா.ஜ.க அதிகமான இடங்களில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தலிலும் சில இடங்களில் அ.தி.மு.க-வை வெற்றி பெறச் செய்து இந்த ஆட்சியை தொடர்வதற்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளார்கள்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க