ஓ.பி.எஸ் சொந்த ஊரைக் கைப்பற்றிய தி.மு.க.! - பெரியகுளத்தில் வெற்றி | DMK wins Periyakulam byelection

வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (23/05/2019)

கடைசி தொடர்பு:22:04 (23/05/2019)

ஓ.பி.எஸ் சொந்த ஊரைக் கைப்பற்றிய தி.மு.க.! - பெரியகுளத்தில் வெற்றி

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது வீடு அமைந்திருக்கும் பெரியகுளத்துக்குமான நெருக்கம் சற்று அதிகம் என்றே சொல்லலாம். தேனியில் கடைக்கோடி பகுதியில் நிகழ்ச்சிகள் எதில் கலந்துகொண்டாலும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வது ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கம். பெரியகுளத்தை அப்படி நேசித்த ஓ.பி.எஸ், தனது அரசியல் வாழ்க்கையை பெரியகுளத்தில் இருந்துதான் ஆரம்பித்தார் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிப்பட்ட பெரியகுளத்தை எதிர்க்கட்சியான தி.மு.க தற்போது கைப்பற்றியிருக்கிறது.

தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார்

கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வின் மூக்கையா, பெரியகுளம் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து பெரியகுளத்தில் லாசர் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. அந்தத் தேர்தலில் லாசர் வெற்றிபெற்றார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் கதிர்காமு பெரியகுளத்தில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார். சுமார் 18 ஆண்டுகள் பெரியகுளம் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைகளில் இருந்த நிலையில், தற்போது தி.மு.க வசம் வந்துள்ளது. தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார், எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேலை வீழ்த்தி பெரியகுளத்தின் எம்.எல்.ஏ ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.