``இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன்!” - எம்.பி ஆனார் ரவீந்திரநாத்குமார் | OPS's son Ravindranathkumar became MP

வெளியிடப்பட்ட நேரம்: 07:02 (24/05/2019)

கடைசி தொடர்பு:07:24 (24/05/2019)

``இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன்!” - எம்.பி ஆனார் ரவீந்திரநாத்குமார்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுவிட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கி சுமார் 21மணி நேரத்திற்குப் பின்னர் தேனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றிபெற்றார். 

ரவீந்திரநாத்குமார்

அ.தி.மு.க சார்பில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த மாதம் 18 -ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 11,67,174 வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. 

ஓபிஎஸ் மகன்

ஆரம்பம் முதலே அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் இருந்தார். நேற்று மாலை, இரண்டாம் இடத்தில் இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைவிட 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் சென்றதால், அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அதனைத் தொடர்ந்து, இறுதி முடிவு இன்று காலை 5 மணிக்கு வெளியானது. அதில், அ.தி.மு.க வேட்பாளரும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் 75,338 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,00,708. அதேபோல,  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 4,25,370 வாக்குகளும்,  அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,42,828 வாக்குகளும் பெற்றனர். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்  ராதாகிருஷ்ணன்  16,796 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சாகுல் ஹமீது 27,664 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 10,567 வாக்குகள். இதில், அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் வாக்குகளும் அடக்கம்.

பேட்டி

வெற்றிபெற்ற ரவீந்திரநாத்குமார், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "இந்த வெற்றியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன்" என்றார். முன்னதாக, நல்ல நேரத்தில் சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்தார் ரவீந்திரநாத்குமார்.