9 -வது முறையாகப் போட்டியிட்டு 6 -வது முறையாக வெற்றி - தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்! | Parliament election thanjavur dmk candidate wins

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (24/05/2019)

கடைசி தொடர்பு:09:30 (24/05/2019)

9 -வது முறையாகப் போட்டியிட்டு 6 -வது முறையாக வெற்றி - தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்!

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை 9 முறை போட்டியிட்டு தற்போது 6 வது முறை எம்.பியாக தி.மு.க வேட்பாளர் பழனிமாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி சார்பாக  அதிக முறை போட்டியிட்டவர் என்ற பெருமையைும் பெறுகிறார்.

பழனிமாணிக்கம்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து, முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 6- வது முறையாக எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் அருகே உள்ள நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்த பழனிமாணிக்கம் தற்போது தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 1984, 1889, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது நடைபெற்ற தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் 9-வது முறையாகப் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

பழனிமாணிக்கம்

பழனிமாணிக்கமும் தொகுதி முழுவதும் தனது பிரசாரத்தை மேற்கொண்டு கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் சென்றார். மேலும் என்னை வெற்றி பெற வைத்தால் விவசாயத்தை காக்கின்ற வகையில், மண்ணை மலடாக்குகிற எந்தத் திட்டத்தையும் கொண்டு வர விட மாட்டேன் என்பவற்றை பிரசாரத்தில் முழங்கினார். இது தஞ்சை தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 
தேர்தல் பதிவான வாக்குகளை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே ஒவ்வொரு சுற்றிலும் பழனி மாணிக்கம் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.

இதையடுத்து 22 சுற்றுகளிலும் அதிக வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 6- வது முறையாக தஞ்சாவூர் தொகுதியிலேயே போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் எந்தக் கட்சியிலும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நபர் 9 முறை போட்டியிட்டதில்லை. பழனிமாணிக்கம் அதிக முறை போட்டியிட்டதற்கான பெருமையைப் பெறுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா என்பவர் 13 முறை போட்டியிட்டு 11 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பழனிமாணிக்கம் 9 முறை போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க