`அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை!’ - தமிழிசை குற்றசாட்டுக்கு கனிமொழி பதில் | Kanimozhi press meet after victory

வெளியிடப்பட்ட நேரம்: 07:46 (24/05/2019)

கடைசி தொடர்பு:07:46 (24/05/2019)

`அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை!’ - தமிழிசை குற்றசாட்டுக்கு கனிமொழி பதில்

``தூத்துக்குடி மக்கள் ஜாதி, மதத்தை அடிப்படையாக வைத்து வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்து உள்ளார்கள்" எனத் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.  

கனிமொழி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 5,61,666 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 2,15,934 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் புவனேஸ்வரன் 76,866 வாக்குகளும் பெற்றனர். 

இதில், தி.மு.க வேட்பாளர் கனிமொழி 3,45,732 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ``நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.கவிற்கு எனது வாழ்த்துகள். அதேபோல தமிழகத்தில் பாராளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி. 

கனிமொழி

தூத்துக்குடியில் மக்ககள் ஜாதி, மதத்தை அடிப்படையாக வைத்து வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்து உள்ளார்கள்.  அதைத்தாண்டி யார் மக்களின் தலைவராக வர வேண்டும் என்பதை நினைத்து மக்கள் வாக்களித்து உள்ளார்கள். ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவின் வெற்றி அலையைத் தாண்டி, தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது, தமிழகம் தனித்து நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

யார் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களிடம் தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்" என்றார். தேர்தல் பிரசாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் முன் வைத்துதான் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ளதாக கூறிய தமிழிசை செளந்தரராஜனின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``ஒருவர் வெற்றி பெறாத நிலையில் அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க