``மக்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது!” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி | This election result is a lesson: minister k.t.rajendra balaji opinion

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (24/05/2019)

கடைசி தொடர்பு:08:15 (24/05/2019)

``மக்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது!” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

``இந்தத் தேர்தல் முடிவுகளால் எங்களுக்கு பின்னடைவு எதுவும் இல்லை. வெற்றியை நோக்கிச் செல்வதற்கான பாடங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது” என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சாத்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வி.சீனிவாசனை விட 456 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வெற்றி பெற்றார். அவருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார்.

ராஜவர்மன்

பின்னர் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம், ``எடப்பாடி ஆட்சி தொடருவதற்கு தேவையான இடங்களை மக்கள் இந்த இடைத்தேர்தலில் அளித்துள்ளனர். இதனால் எங்களிடம் போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் எங்கள் ஆட்சி தொடரும். இந்தத் தேர்தல் எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. வருங்காலத்தில் வெற்றியை நோக்கிச் செல்வதற்காக மக்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது. இந்தத் தேர்தலில் தான் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளும் வெடி வெடித்துள்ளன. அ.ம.மு.க மட்டும்தான் வெடி வெடிக்கவில்லை.

ராஜேந்திரபாலாஜி

தினகரனுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். எங்கள் கட்சி உடைந்தது என தி.மு.க தொடர்ந்து பரப்பிய பொய் வதந்தி நடுநிலை வாக்காளர்களை திசை திருப்பியுள்ளது. தி.மு.க - காங்கிரஸ் மத்தியில் வெற்றி பெறுமோ என நினைத்து சிலர் வாக்களித்ததால்தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க - காங்கிரஸ் வெற்றி நிலையானது அல்ல. அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகளும் அல்ல. இராஜீவ்காந்தி மேல் உள்ள அனுதாபத்தாலும், எங்கள் மீதான பொய் பிரசாரத்தாலும்தான் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே தவிர ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்றோ, ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்றோ யாரும் விரும்பி வாக்களிக்கவில்லை.

அமைச்சர்

தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு எதிராக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியினர் அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். தி.மு.க கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் வீண். கடந்த தேர்தலில் நாங்கள் 37 எம்.பி-க்கள் வைத்திருந்தோம். ஆனால் எங்களால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்களால் ஒன்றும் நடக்காது. தமிழ்நாட்டின் ஆட்சிக்கும், இந்திய ஆட்சிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

தி.மு.க கூட்டணி கட்சியினர் பிரதமர் நரேந்திரமோடியை அதிகமாக விமர்சனம் செய்துள்ளனர். எனவே, தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் யாரும் மோடியைச் சந்தித்து பேச மாட்டார்கள். தமிழக முதல்வரை பார்த்தும் எதுவும் பேச மாட்டார்கள். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என மக்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கியதாகவே இந்தத் தேர்தல் முடிவை எடுத்துக் கொள்கிறோம். எங்களுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.