19 ஆண்டுகளுக்குப் பின் தகர்ந்த அ.தி.மு.க கோட்டை - ஆண்டிபட்டியில் வெற்றிபெற்ற தி.மு.க! | The ADMK Fort came under DMK. DMK win in Andipatti

வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (24/05/2019)

கடைசி தொடர்பு:09:49 (24/05/2019)

19 ஆண்டுகளுக்குப் பின் தகர்ந்த அ.தி.மு.க கோட்டை - ஆண்டிபட்டியில் வெற்றிபெற்ற தி.மு.க!

அ.ம.மு.க கொள்கைப் பரப்புச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட, 18 -பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி தொகுதி உட்பட 18 சட்டசபைத் தொகுதிகளைக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேனி எம்.பி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. "ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு பாடம் புகட்டவே நான் எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார் தங்க தமிழ்ச்செல்வன். அதைத் தொடர்ந்து, அ.ம.மு.க சார்பில் வழக்கறிஞர் ஜெயக்குமார் களத்தில் இறக்கப்பட்டார்.

ஆண்டிபட்டி வேட்பாளர்கள்

அ.தி.மு.க சார்பில் லோகிராஜனும் தி.மு.க சார்பில் மகாராஜனும் களம் இறக்கப்பட்டனர். இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதால், அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனம் எழுந்தது. "அவன் வேற கட்சி. நான் வேற கட்சி. அவன் வேற சின்னத்தில் போட்டிபோடுறான், நான் வேற சின்னத்தில் போட்டிபோடுறேன்" என்று வெளிப்படையாகப் பேசினார், தி.மு.க வேட்பாளரும், லோகிராஜனின் அண்ணனுமான மகாராஜன். 

தி.மு.க

நடந்துமுடிந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (23/05/2019) காலை எட்டு மணி முதல் நடைபெற்றுவந்தது. முதல் ஐந்து சுற்றுகள் வரை தம்பியான லோகிராஜன், அண்ணன் மகாராஜனைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். ஐந்து சுற்றுகள் கடந்த பின்னர் மகாராஜன், லோகிராஜனைவிட முன்னிலையில் சென்றார். இந்த முன்னிலை, கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை வரை தொடர்ந்தது. இறுதியாக, மகாராஜன், லோகிராஜனை வெற்றிகொண்டார். 

கவிழ்ந்த அ.தி.மு.க கோட்டை : 

ஆண்டிபட்டி என்றாலே அது அ.தி.மு.க கோட்டை என்றே சொல்லப்படும். 1984 -ல் எம்.ஜி.ஆர் ஆண்டிபட்டி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி பகுதியில் தனக்கென செல்வாக்கு கொண்டிருந்த தி.மு.க, தனது செல்வாக்கை படிப்படியாக இழக்கத்தொடங்கியது. இறுதியாக, 2001 -ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டிபட்டியை தி.மு.க வசப்படுத்த முடியாமல்போனது. இடையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இரண்டு முதல்வர்களை உருவாக்கிய தொகுதி எனப் பெயர் பெற்ற ஆண்டிபட்டி முழுவதுமாக அ.தி.மு.க கோட்டையாக மாறியது. சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு, தற்போது ஆண்டிபட்டி தி.மு.க வசம் வந்துள்ளது. கடைசியாக 1996 -ம் வருடம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க'வின் ஆசையன் வெற்றிபெற்று ஆண்டிபட்டியின் எம்.எல்.ஏ ஆனார். அதனைத் தொடர்ந்து தற்போது, மகாராஜன் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.