திருப்பம் தந்த பாலியல் வழக்கு? - 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியை வசப்படுத்திய தி.மு. க | DMK wins in Pollachi after 39 years

வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (24/05/2019)

கடைசி தொடர்பு:09:06 (24/05/2019)

திருப்பம் தந்த பாலியல் வழக்கு? - 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியை வசப்படுத்திய தி.மு. க

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியை 39 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது.  ஏழுமுறை அ.தி.மு.க இங்கு நேரடியாக வெற்றி பெற்றுள்ளது.  மேலும், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ஐந்து தொகுதிகள் அ.தி.மு.க வசம் உள்ளன. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாத சிட்டிங் எம்.பி மகேந்திரன், மீண்டும் வேட்பாளர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் என இரண்டு மூத்த அமைச்சர்கள் என்று அ.தி.மு.க-வுக்கு பொள்ளாச்சியில் ஏகப்பட்ட பிளஸ்கள் இருந்தன. இதனிடையே, தமிழகத்தையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கும், அதில்  அ.தி.மு.க புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டதும், இங்கு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதையெல்லாம் கடந்து மகேந்திரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

தி.மு.க கூட்டணியில், பொள்ளாச்சி தொகுதிக்கு தனிக்குழு நியமிக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்குதான் இவர்களின் அஸ்திரமாக இருந்தது. பொள்ளாச்சி தொகுதியில் பெண்கள் வாக்குகள் அதிகம் என்பதால், அது தி.மு.க-வுக்கு சாதகமாகவும் முடிந்துவிட்டது.  வாக்குப்பதிவுக்கு முன்புகூட அ.தி.மு.க-வுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், வாக்குப்பதிவுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகத்துடன் காணப்படும் மகேந்திரன், சற்று பதற்றமான முகத்துடனே வாக்கு எண்ணும் மகாலிங்கம் கல்லூரிக்கு வந்தார். முதல் சுற்றில் இருந்தே தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு வித்தியாசத்தில் சண்முகசுந்தரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார்.

சண்முகசுந்தரம்

அ.தி.மு.க பெரிதும் நம்பியிருந்த வேலுமணியின் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு என்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க தான் முன்னிலை.  இதனால், 10-வது சுற்றின்போதே  தி.மு.க-வினர் தங்களது வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். 'ஜெய்... ஜெய் சண்முகம், ஜெயிச்சுட்டார் சண்முகம்' என்று உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றனர் தி.மு.க-வினர். மறுபக்கம், அ.தி.மு.க-வினர் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து, மொத்தம் 22 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் முடிவில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 883 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது. இதன்மூலம், 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு, தி.மு.க வேட்பாளர் சி.டி.தண்டபாணி வெற்றிபெற்றார். அதன் பிறகு தி.மு.க இங்கு இந்தத் தேர்தலில்தான் நேரடியாக வெற்றிபெற்றது.

தி.மு.க வெற்றி

வாக்குகளைப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க முத்துக்குமார, 5-வது இடத்தையே பிடித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொண்டுவந்தவர்களில் ஒருவரான மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மூகாம்பிகா, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சனுஜா நான்காவது இடத்தைப் பிடித்தார். மூகாம்பிகா 59 ஆயிரத்து 693 வாக்குகளும், சனுஜா  31 ஆயிரத்து 483 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 15 ஆயிரத்து 110 பேர் வாக்களித்துள்ளனர் இந்த வெற்றிமூலம் பொள்ளாச்சி தொகுதியை      4-வது முறை கைப்பற்றியுள்ளது தி.மு.க.