கடைசிசுற்று வரை நீடித்த சாத்தூர் வாக்கு எண்ணிக்கை - சோகமாக வெளியேறிய தி.மு.க வேட்பாளர்! | dmk candidate lost in by election

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (24/05/2019)

கடைசி தொடர்பு:10:19 (24/05/2019)

கடைசிசுற்று வரை நீடித்த சாத்தூர் வாக்கு எண்ணிக்கை - சோகமாக வெளியேறிய தி.மு.க வேட்பாளர்!

வெற்றிபெறுவோம் என்ற மகிழ்ச்சியோடு வந்த தி.மு.க வேட்பாளர், தோல்வியடைந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சோகத்தோடு திரும்பிச்சென்றார்.

திமுக

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கியதில் இருந்தே, அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன் முன்னிலையில் இருந்தார். இதனால், ஒவ்வொரு சுற்று வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடும்போதும் அ.தி.மு.க-வினர் மிகுந்த ஆரவாரத்துடன் இருந்தனர். தி.மு.க-வினர் அமைதியாகவே இருந்தனர்.

ஆனால், 11-வது சுற்றுக்குப் பின் தி.மு.க வேட்பாளர் சீனிவாசனுக்கு சாதகமான சூழல் உருவானது. சில சுற்று முடிவுகள் தி.மு.க-வுக்கும், சில சுற்று முடிவுகள் அ.தி.மு.க-வுக்கும் சாதகமாக இருந்தன. இந்தத் தகவலையறிந்த தி.மு.க வேட்பாளர் சீனிவாசன், நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார்.

தபால் வாக்குகளில் தி.மு.க-வுக்கு 802 வாக்குகளும், அ.தி.மு.க-வுக்கு 187 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனால், எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை தி.மு.க கட்சியினருக்கும் வேட்பாளர் சீனிவாசனுக்கும் இருந்தாலும், யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு ஏற்படத் தொடங்கியது. தி.மு.க-வுக்கு கூடுதல் வாக்குகள் இருந்ததால், நாம் வெற்றிபெற்றபின் என்னவெல்லாம் செய்யலாம், எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் மையத்துக்கு வெளியே இருந்த தி.மு.க-வினர் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் அ.தி.மு.க-வே முன்னிலையில் இருந்தது.

அதிமுக

இதனால், சீனிவாசன் கடும் விரக்தியிலேயே வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்திருந்தார். நிச்சயம் தனக்கு தோல்வி என்பதை அறிந்த அவர், சிறிது நேரத்துக்குப் பின் அறையில் இருந்து வெளியேறினார். பரபரப்பான நேரங்களுக்கு மத்தியில், இறுதியாக 456 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன் சாத்தூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார். அவருக்கு, மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.