அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பதிலும் சிக்கல்! - அ.தி.மு.க ஆலோசனை? | admk will give rajyasabha seat to anbumani?

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (24/05/2019)

கடைசி தொடர்பு:11:06 (24/05/2019)

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பதிலும் சிக்கல்! - அ.தி.மு.க ஆலோசனை?

நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அன்புமணி ராமதாஸ் கூட தருமபுரியில் தோல்வியடைந்துள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு மட்டும்தான் ஒரு ராஜயசபா சீட் ஒதுக்கப்பட்டது. தற்போது, அன்புமணி தோல்வியடைந்துள்ளதால், ராஜ்யசபா எம்.பி ஆகும் கனவில் நிச்சயம் இருப்பார். எம்.பி ஆனால், பின்னர் அமைச்சர் பதவிக்கும் அடிப்போடும் திட்டத்தில் இருப்பார். ஆனால், பா.மக, பாரதிய ஜனதா, தே.மு.தி.க என கூட்டணிக் கட்சிகளும் தோல்வியைச் சந்தித்ததால், அ.தி.மு.க தலைமை கடும் ஏமாற்றத்தில் உள்ளது. பா.ம.க வாக்கு வங்கியும் அ.தி.மு.க-வுக்கு உதவவில்லை. பா.ம.க வாக்கு வங்கி நிறைந்துள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. 

அன்புமணி ராமதாஸ்

ஜெயலலிதா காலத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று, 37 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இப்போது, பா.ம.க போன்ற பலமான கட்சியுடன் கூட்டணி வைத்தும் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதோடு, அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியும் அ.தி.மு.க தலைமை அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தது அ.தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்றே தொண்டர்கள் கருதுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன் இருந்த அ.தி.மு.க, அதையும் இழந்துள்ளது. தற்போது, தி.மு.க 23 தொகுதிகளில் வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி என்ற  அந்தஸ்தைப் பெற்றுள்ளது. தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக திரிணாமூல், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலா 22 தொகுதிகளைக் கையில் வைத்துள்ளன. அ.தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தலில் கிடைத்த ஒரே லாபம், ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது  மட்டும்தான். அதுவும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் பகுதியைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளில்தான் அ.தி.மு.க-வுக்கு கைகொடுத்துள்ளது. பா.ம.க வாக்கு வங்கியால் அ.தி.மு.க எந்த லாபமும் அடையவில்லை.

கூட்டணிக் கட்சிகளால் எந்த லாபமும் இல்லாத நிலையில், பா.ம.க-வுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை அ.தி.மு.க மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஜெயலலிதா காலத்திலும் ஒரு முறை பா.ம.க-வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க போட்டியிட்டது. அப்போது, பா.ம.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. அதைக் காரணம் காட்டி, பா.ம.க -வுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஜெயலலிதா மறுத்த கதையும் நடந்ததுண்டு. அதனால், அறிவித்தபடி பா.ம.க-வுக்கு ராஜ்யசபா சீட் அளிப்பது சந்தேகம் என்றே அ.தி.மு.க வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க