`இந்த வெற்றி கொண்டாடக்கூடிய வெற்றி அல்ல!'- இப்படி ஏன் சொல்கிறார் ஆ.ராசா | D.M.K. A.Raja Ooty byte

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (24/05/2019)

கடைசி தொடர்பு:11:40 (24/05/2019)

`இந்த வெற்றி கொண்டாடக்கூடிய வெற்றி அல்ல!'- இப்படி ஏன் சொல்கிறார் ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற ஆ.ராசா, `வட நாட்டில் பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லாததால், மக்கள் மதவாத சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்' எனக் கூறினார்.

நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பெற்ற ஆ.ராசா

நீலகிரி [தனி ] நாடாளுமன்றத்  தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அ.தி.மு.க சார்பில் தியாகராஜன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன், அ.ம.மு.க சார்பில் ராமசாமி, சுயேச்சைகள் என மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். தி.மு.க வேட்பாளர் ராசா, மூன்றாவது முறையாக நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார்.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட குன்னூர், கூடலூர், ஊட்டி, அவிநாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், ஊட்டி அருகேயுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

24 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவில், தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா 5 லட்சத்து 47 ஆயிரத்து 832 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 9 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க வேட்பாளரைக் காட்டிலும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 823 வாக்குகள் அதிகம் பெற்று, ராசா வெற்றிபெற்றார். மூன்றாவது இடத்தை மக்கள் நீதி மய்யம் பிடித்தது. இதன் வேட்பாளர் ராஜேந்திரன் 41,169 வாக்குகள் பெற்றார். 40 ஆயிரத்து 419 வாக்குகள் பெற்று அ.ம.மு.க., வேட்பாளர் ராமசாமி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அடுத்தபடியாக, நோட்டோ 18 ஆயிரத்து 149 வாக்குகள் பெற்றது.

ராசா பிரசாரம்

நீலகிரி தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பெற்ற ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “இந்தத் தேர்தல் இரு அரசியலை வேறுபடுத்தியுள்ளது. ஒன்று, ஸ்டாலின் ஆளுமை மற்றும் தலைமையை அங்கீகரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் மதவாதத்திற்கு ஆதரவாகச் சென்ற நிலையில், தமிழகம் மட்டும்தான் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரால் பக்குவப்படுத்தப்பட்ட திராவிட மண் என்பதை நிரூபித்துள்ளது. திராவிட தத்துவத்தைத் தொடர்ந்து பாதுகாத்திட, தி.மு.க தொடர்ந்து உழைக்கும். தற்போது பெற்றுள்ள வெற்றி, கொண்டாடக்கூடிய வெற்றி அல்ல.

ராசா

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கின்ற வகையிலும், இந்தியாவை ஒரு மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேசம் என்ற ஆபத்தான போக்கினைத் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்துள்ளனர். இதனால், கெட்ட பலனை அனுபவிக்கக்கூடிய அபாயம் உள்ளது. இந்தியாவுக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. அதிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமை உள்ளது. வடநாட்டில் அண்ணா, பெரியார்,அண்ணா,கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய துணைக் கண்டத்தை மதச்சார்பற்ற சக்திகள் சேர்ந்து, இந்த தேசத்தைக் காக்க உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.