`27 வேட்பாளர்கள் டெபாசிட்; நோட்டாவுக்கு 15,073 ஓட்டுகள்!- அதிரவைத்த 'கொங்கு' வேட்பாளர் | KMDK defeats ADMK in Namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (24/05/2019)

கடைசி தொடர்பு:14:55 (24/05/2019)

`27 வேட்பாளர்கள் டெபாசிட்; நோட்டாவுக்கு 15,073 ஓட்டுகள்!- அதிரவைத்த 'கொங்கு' வேட்பாளர்

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளரான  ஏ.கே.பி.சின்ராஜ், அ.தி.மு.க வேட்பாளர் காளியப்பனை  2.65 லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

கொ.ம.தே.க வேட்பாளர் சின்ராஜ்

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் கொ.ம.தே.க வேட்பாளர் சின்ராஜ், அ.தி.மு.க சார்பில் காளியப்பன் உட்பட 29 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை வகித்த  தி.மு.க கூட்டணி வேட்பாளர் சின்ராஜ், இறுதிச்சுற்றில் மட்டும் அ.தி.மு.க காளியப்பன் 108 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார். ஆனால்,  ஓட்டு மொத்தமாக வேட்பாளர் சின்ராஜ், 2.65 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று, அ.தி.மு.க வேட்பாளரைப் படுதோல்வி அடையச்செய்தார்.

கொங்கு மண்டலத்தில் கொண்டாட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காந்திசெல்வன் ஆகியோருடன் சென்று, மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஆசியா மரியத்திடம் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்.பின்னர் பேசிய  சின்ராஜ், ' எம்.பி பதவிமூலம் எனக்குக் கிடைக்கும் சம்பளத்தை, தொகுதியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவேன். மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். சாதி, மதம், கட்சிப் பாகுபாடு இன்றி பணியாற்றுவேன். 

தேர்தல் நேரத்தின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியிலும், மக்கள் பிரச்னைகள்குறித்து குழு அமைத்து, ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவேன். குறிப்பாக, குடிநீர்ப் பிரச்னை, சாலை வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனக்கு வாக்களித்த பொதுமக்கள் மற்றும் வெற்றிக்குப் பாடுபட்ட கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

திமுக கூட்டணி கட்சியினர்

சின்ராஜ் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர்  ஓட்டு எண்ணும் மையம் முன்பும் மற்றும்  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கொங்குநாடு மக்கள் தேசியக்  கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில்  பலமுறை போட்டியிட்டிருந்தாலும், முதல் முறையாக தற்போது வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல்,  இந்தத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக்  கட்சி, அ.தி.மு.க வேட்பாளர்களைத் தவிர்த்து, மீதமுள்ள 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 15 ஆயிரத்து 73 ஓட்டுகள் கிடைத்திருந்தன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க