`மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்!' - அன்புமணி | DMK's Senthil Kumar defeats Anbumani Ramadoss in Dharmapuri

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (24/05/2019)

கடைசி தொடர்பு:14:45 (24/05/2019)

`மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்!' - அன்புமணி

இந்தியாவின் 17- வது நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கட்சி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தி.மு.க 38 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. 

மோடி

ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனியில் வென்றுள்ளார். அவரைத் தவிர அ.தி.மு.க-வின் பிற வேட்பாளர்களோ அதனுடன் கூட்டணியில் இணைந்த பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளின் வேட்பாளர்களோ எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. 

ஸ்டாலின்

 குறிப்பாக, பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளார்.  கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருந்த பா.ம.க, தருமபுரியில் அமோக வெற்றிபெற்றது. அன்புமணியின் வெற்றியைப் பார்த்து அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகள் வியந்தனர்.

இந்த முறையும் தருமபுரியில் போட்டியிட்டால் வெற்றி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்புமணி தோல்வியடைந்துள்ளார். இதுபற்றி தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ``மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு, எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிச்சயமாக அவர் தலைமையிலான ஆட்சி, நாட்டை மேலும் வளப்படுத்தி, உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அன்புமணி

நாங்கள் வெற்றிபெறாமல் போனதற்கான காரணம்குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவோம். தேர்தலில் நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைத் திருத்திக்கொண்டு, வரும் தேர்தலில் நிச்சயமாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம். தமிழ்நாட்டில் நல்ல திட்டம் கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்போம். நான் கூறியதுபோல், காவிரி உபரி நீர் திட்டத்தை தருமபுரிக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்போம்” என்றார்.