`போகிற இடமெல்லாம் கரன்ட் கட்!' - அ.தி.மு.க-வினரின் செயலால் கொந்தளித்த பழனிமாணிக்கம் | Thanjavur DMK cadres upset over power cut after winning election

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (24/05/2019)

கடைசி தொடர்பு:15:55 (24/05/2019)

`போகிற இடமெல்லாம் கரன்ட் கட்!' - அ.தி.மு.க-வினரின் செயலால் கொந்தளித்த பழனிமாணிக்கம்

தஞ்சாவூர் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்கள் பெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சென்ற இடங்களில் எல்லாம் திடீரென கரன்ட் கட் செய்யப்பட்டது. இது, தி.மு.க-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, இதற்குக் காரணம் அ.தி.மு.க-வினர்தான் எனப் பேசிக்கொண்டனர்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் பழனிமாணிக்கம்

தஞ்சாவூர் நாடாளுமன்றம் மற்றும்  சட்டமன்றத்திற்கான  இடைத்தேர்தல் நடந்தது. இதில், இரண்டிலுமே  தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்திற்கு தி.மு.க சார்பில் போட்டியிட்ட பழனிமாணிக்கம் 3,60,000 வாக்கு வித்தியாசத்திலும், சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் 33,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றனர். அ.தி.மு.க வேட்பாளராக சட்டமன்றத்திற்கு காந்தி என்பவர் போட்டியிட்டார். நாடாளுமன்றத்திற்கு அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா  வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் போட்டியிட்டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, ஆரம்பத்தில்  இருந்தே தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலைபெற்று வந்தனர். முடிவில் தி.மு.க வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பின்னர், இருவரும் இரவு 12 மணியளவில் வெற்றிக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டனர். பிறகு பெரியார், அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யச் சென்றனர். உடன் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பலர் சென்றனர். அப்போது, முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாலையை  ஒரேசமயத்தில் இருவருக்கும் அணிவித்தார். பிறகு தி.மு.க-வினர், தலைவர்  ஸ்டாலின் வாழ்க எனக் கோஷமிட்டனர். பின்னர் பழனிமாணிக்கம், நீலமேகம்  மற்றும் நிர்வாகிகள் முதலில் அண்ணா, பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்தனர். மாலை அணிவித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென கரன்ட் கட் ஆனது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் பழனிமாணிக்கம்

பின்னர் கீழே இறங்கிய பிறகு, பழனிமாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்து, ``தலைவர் ஸ்டாலின், பெருந்தன்மையோடு எங்களை போட்டியிட வைத்தார். எங்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த அனைவருக்கும் நன்றி. காவிரிப் பிரச்னை தொடர்பாகவும் டெல்டா மக்களைப் பாதுகாக்கும் வகையிலும் எங்களுடைய பணிகள் இருக்கும்'' என்று கூறினார். அதன்பிறகு, கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போது, அங்கும் கரன்ட் கட்டானது. இது, தி.மு.க-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சீனிவாசபுரத்தில் உள்ள பழனிமாணிக்கம் வீட்டுக்குச் சென்றனர். அங்கும் கரன்ட் கட்டானது.

அப்போது தி.மு.க-வினர் சிலர், ``தஞ்சையில் மட்டுல்ல தமிழகம் முழுவதும் தி.மு.க அமோக வெற்றிபெற்றுள்ளது. இதை அ.தி.மு.க-வினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. தஞ்சாவூரில் உள்ள அ.தி.மு.க-வினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்கள் செல்லும் இடங்களில்  கரன்டை கட் செய்கின்றனர்'' என்றனர். அ.தி.மு.க-வினரோ, `பணிக்காக நகரம் முழுவதும் கரன்ட் கட் செய்யப்பட்டிருந்தது. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை'' என்று தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க