`எப்படியோ, வேலூரில் தேர்தல் நடக்கல... நான் தப்பிச்சிட்டேன்!’- மகிழ்ச்சியில் ஏ.சி.எஸ் | A.C.Shanmugam seems happy over vellore constituency election cancelled

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (24/05/2019)

கடைசி தொடர்பு:16:10 (24/05/2019)

`எப்படியோ, வேலூரில் தேர்தல் நடக்கல... நான் தப்பிச்சிட்டேன்!’- மகிழ்ச்சியில் ஏ.சி.எஸ்

``தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்துசெய்யப்படாமல் இருந்திருந்தால், இந்தத் தொகுதியையும் தி.மு.க-வே கைப்பற்றியிருக்கும். எப்படியோ நான் தப்பித்துவிட்டேன்’’ என்கிற உற்சாகத்தில் ஏ.சி.சண்முகம் இருக்கிறார்.

ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். ஐ.டி ரெய்டில், துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாக ரூ.10 கோடியே 57 லட்சம் சிக்கியதால், வேலூர் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்துசெய்தது. இதைத்தொடர்ந்து, வேலூர் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை அணுகிய ஏ.சி.சண்முகம், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டார். வேலூர் தேர்தலை நடத்துவது குறித்து ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், ஏ.சி.சண்முகம் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். 

சொந்த ஊரான ஆரணியில் ஓட்டு போட்ட ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் வேலூர் தொகுதி மக்கள் மட்டும் வாக்களிக்கவில்லை’’ என்றுகூறி பக்கத்திலிருந்த இரும்புக் கம்பியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார். அருகிலிருந்த தொண்டர்களும் கண்கலங்கி வருத்தப்பட்டனர். `அழுவாதீங்க அண்ணா’ என்று ஏ.சி.சண்முகத்தைச் சமாதானம் செய்தனர். கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபடியே அவர், வாடிய முகத்துடன் அங்கிருந்து சென்றார். `வேலூர் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றிபெறுவேன்' என்ற மன உறுதியோடு ஏ.சி.சண்முகம் இருந்தார்.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்

இந்த நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் ஏ.சி.சண்முகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றிருக்கிறது. எந்தெந்த தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டதோ, அந்தத் தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்து அதிர்ந்துபோன ஏ.சி.சண்முகம், வேலூரில் தேர்தல் நடத்தியிருந்தால் நமக்கும் இதே கதிதானா என்ற படப்படப்பில் இருக்கிறார். எனினும், தேர்தலை எதிர்கொண்டு தோல்வியுற்றிருந்தால் அவமானமாக இருந்திருக்கும். நான் தப்பிச்சிட்டேன் என்ற மகிழ்ச்சியில் ஏ.சி.எஸ் இருப்பதாக அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.