`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்!'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின் | TN Political party's strategy after election result

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (24/05/2019)

கடைசி தொடர்பு:15:19 (24/05/2019)

`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்!'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்

ஸ்டாலின்

தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலின் முடிவைவிட இடைத்தேர்தலின் முடிவைத்தான் தி.மு.க, அ.தி.மு.க. ஆவலுடன் எதிர்பார்த்தனர். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வைவிட தி.மு.க. கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. எப்படியாவது எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ஸ்டாலின் எம்.எல்.ஏ-க்கள் கணக்குப் போட்டுவருகிறார். அதிர்ஷ்டம் காரணமாக எடப்பாடி ஆட்சியைத் தக்கவைத்துவிட்டார். 

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 தொகுதிகளில் தி.மு.க-வும் 9 தொகுதிகளில் அ.தி.மு.க-வும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை முழுமனதோடு கொண்டாட முடியாத சூழலில் அந்தக்கட்சியினர் உள்ளனர். தமிழக சட்டசபையில் தினகரன் மற்றும் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் என 4 பேர் உள்ளனர். இதுதவிர கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தமிமுன்அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரின் நிலை மதில்மேல் பூனை போல உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு இடைத்தேர்தல் முடிவுக்குப்பிறகு மெஜாரிட்டி கிடைத்தாலும் அதை தொடரவிடாமல் தடுக்க பலவகையில் செக் வைக்க தி.மு.க. தரப்பு காயை நகர்த்தி வருகிறது. 

 ஸ்டாலின்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதால் 38 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. 37 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம். மயிரிழையில் இந்த ஆட்சி தப்பியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து இந்த ஆட்சியை நடத்த முடியுமா என்பது கேள்விகுறியாகத்தான் உள்ளது.  தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்தகட்ட அரசியல் நகர்வு தமிழகத்தில் நடக்கவுள்ளது. 

கருணாநிதியின் மறைவுக்குப்பிறகு சட்டசபையில் தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். தற்போது 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க-வின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 7 ஆகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ உள்ளார். இதனால் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. மெஜாரிட்டியை நிரூபிக்க இன்னும் 8 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசலால் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லை, ஆட்சிக்கு செக் வைக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது'' என்றார். 

 ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஸ்டாலின்

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க தேவையான மெஜாரிட்டி இடைத்தேர்தல் மூலம் எங்களுக்கு  கிடைத்துள்ளது. கடந்த 2016-ல் நடந்த தேர்தலின்போது 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு 133 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்தச் சமயத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் உருவான அணிக்கு 11 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்தனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். 

முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 பேர் எதிராக வாக்களித்தும் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோத்து, துணை முதல்வரானார். 

இந்தச்சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். கடைசி நேரத்தில் ஜக்கையன் மனம்மாறினார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 115 ஆனது. 

இந்தச் சமயத்தில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டுவருகின்றனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அ.தி.மு.க-வின் பலம் 123 ஆக உள்ளது. இதனால், இந்த ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை'' என்றார். 

 தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு,  ``தேர்தல் முடிவுகள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் டி.டி.வி.தினகரன் கூறியதுபோல பீனிக்ஸ் பறவைபோல எழுந்துவருவோம். சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரப்படும்போது எங்களின் முடிவு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  3 எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் சட்டரீதியாக சந்திக்க திட்டமிட்டுள்ளோம். 18 எம்.எல்.ஏ-க்களுக்கு நடந்ததுபோல இந்தமுறை நடக்காமலிருக்க கவனத்துடன் செயல்படுவோம். அதுதொடர்பாக தினகரன், ஆலோசித்து வருகிறார்'' என்றனர். 
 
இதுகுறித்து தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``மக்களவைத் தேர்தலைவிட இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில்தான் அ.தி.மு.க அதிக கவனம் செலுத்தியதை தேர்தல் முடிவு காட்டுகிறது.  தமிழகத்தில் தேனி தொகுதியிலும் 8 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் அ.தி.மு.க மற்ற தொகுதிகளில் ஏன் வெற்றி பெற முடியவில்லை. அதுவும், பா.ஜ.க போட்டியிட்ட தொகுதிகளில் முழுமனதோடு அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர் வேலை பார்க்கவில்லை.  இதனால் பா.ஜ.க மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைக்க உள்ள பா.ஜ.க.வுக்கு இனி அ.தி.மு.க-வின் தயவு தேவையில்லை. ஆனால், தமிழகத்தில் ஆட்சியை நடத்த பா.ஜ.க-வின் தயவு அ.தி.மு.க-வுக்குத்தான் தேவை. இதனால், கடந்த காலகட்டங்களைப்போல பா.ஜ.க-வின் கருணை பார்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைக்காது.  மீண்டும் பிரதமராக பதவியேற்கும் பிஸியில் பா.ஜ.க மேலிடம் இருந்துவருகிறது. இந்தச் சமயத்தில் தி.மு.க-வினர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுவது வதந்தி. தனிமெஜாரிட்டி இருக்கும்போது பா.ஜ.க. ஏன் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என்றார். 

இந்தச் சூழ்நிலையில் தி.மு.க-விடம் 23 எம்.பி-க்கள் உள்ளனர். மூன்றாவது இடத்திலிருக்கும் தி.மு.க., பா.ஜ.க தலைமையிடம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் மூலம் தி.மு.க. தரப்பிலிருந்து அமித் ஷாவிடமும் பிரதமர் மோடியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதால் தமிழகத்தில் எதிர்பாராத அரசியல் திருப்பம் ஏற்படும் என்று சொல்கின்றனர் தி.மு.க-வின் உள்விவரம் அறிந்தவர்கள். 

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் சிலரையும் தினகரன் தயவைப் பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் எண்ணத்தில் தி.மு.க உள்ளது. அதற்கான பேரம் ரகசியமாக நடந்துவருகிறது. ஏற்கெனவே மதில்மேல் பூனையாக இருக்கும் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரிடமும் தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தி.மு.க வலையில் மெஜாரிட்டிக்குத் தேவையான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைத் தடுத்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அ.தி.மு.க-வினர் ஆலோசித்து வருகின்றனர். 

இதுகுறித்து தமிமுன்அன்சாரி, கருணாஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேச முயன்றோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.