பிக்னிக் கொண்டு போக ஒரு சிம்பிள் டிஷ்! - கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் #MyVikatan | Arisim paruppu rice is famous in kongu district

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (24/05/2019)

கடைசி தொடர்பு:16:16 (24/05/2019)

பிக்னிக் கொண்டு போக ஒரு சிம்பிள் டிஷ்! - கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் #MyVikatan

சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என பலவகை வெரைட்டி சாதங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், தமிழகத்தில் கொங்கு மண்டலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் கிடைத்திராத ஒரு உணவு வகை எதுவென்று கேட்டால், அது அரிசிம் பருப்பும் சாதம் என்று சொல்லலாம். கொங்கு மண்டலத்தில், குறிப்பாகத் திருப்பூர், கோவை, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிசிம் பருப்பு சாதம் வெகு பிரபலம். அப்பகுதி வீடுகளில் மட்டுமே சமைக்கப்படும் இந்த உணவு வகையைக் கொங்கு மக்களின் ஆல்டைம் பேவரைட் என்றே சொல்லலாம். வீடுகளில் வாரம் ஒருமுறையாவது இந்த உணவைச் சமைத்துவிடுவார்கள்.

அரிசிம் பருப்பு

வெறும் அரிசியும், துவரம் பருப்பையும் அரை மணிநேரம் வரை ஊறவைத்து, பின் வெங்காயம், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாளித்துத் தயாரிக்கப்படும் இந்த உணவை கொங்கு நாட்டுப் பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். காலை, மதியம், இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற ருசியான உணவு வகை இது.

அரிசிம் பருப்பு

தட்டைப் பயிறு, அவரைப்பயிறு, கொள்ளு என தங்களுக்குப் பிடித்த பயிறு வகைகளைக் கொண்டும் அரிசிம் பருப்பு சாதம் தயாரிக்கலாம். அத்துடன் தேங்காயை சில்லு சில்லாக நறுக்கிப் போட்டுக் கிளறினால் அதன் சுவை மேலும் மெருகேறும். தேங்காய் எண்ணெய், நெய் அல்லது தயிர் சேர்த்துச் சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள கடலைச் சட்னி, புளிச் சட்னி அல்லது ஊறுகாய் பெஸ்ட் சாய்ஸ்.

சமீபகாலமாக அரிசிம் பருப்பு பிக்னிக் என்ற பழக்கம் கொங்கு வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. வீட்டில் சுடச்சுட அரிசிம் பருப்பு சாதத்தைத் தயாரித்துக்கொண்டு, அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று ஆர அமர உட்கார்ந்து கதைகள் பேசி அந்த சாதத்தை சுவைத்துவிட்டு வருவது இந்த பிக்னிக்கின் அஜன்டா.