காலை 8 மணி முதல் அதிகாலை 3 வரை..! - சிதம்பரத்தில் என்ன நடந்தது? லைவ் ரிப்போர்ட் | Chidambaram constituency vote counting - From morning 8 to midnight 2 - live repot

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (24/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (24/05/2019)

காலை 8 மணி முதல் அதிகாலை 3 வரை..! - சிதம்பரத்தில் என்ன நடந்தது? லைவ் ரிப்போர்ட்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கடைசி சுற்று வரையிலும் யார் வெற்றிபெறப்போவது, தோல்வியைத் தழுவப்போவது யார் என்று போட்டி இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நீடித்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வி.சி.க வேட்பாளரான திருமாவளவனும், அ.தி.மு.க வேட்பாளரான சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால் முடிவு யாருக்குச் சாதகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மக்கள் டி.வி-யின் முன்பும், கையில் செல்போன்களோடும் பரபரப்பாகக் காணப்பட்டார்கள். இத்தொகுதியைத் தமிழகமே உற்று நோக்கும் தொகுதியாக மாறி பரபரப்பைக் கிளப்பியது.

திருமாவளவன்

திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்குமுறை போட்டியிட்டாலும், 2009-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரகாசி 4,29,536 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருமாவளவன் 3,01,041 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அத்தோடு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட அவர், வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முருகு மாறனிடம் தோல்வியுற்றார். இந்த நிலையில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுப் பல போராட்டங்களுக்கு இடையே வெற்றி வாகை சூடியிருக்கிறார் திருமாவளவன்.

திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க சார்பில் சந்திரசேகர் இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கினார். அ.ம.மு.க சார்பில் இளவரசனும் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி எனப் பலர் போட்டியிட்டனர். காலையிலேயே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த திருமாவளவன் பத்திரிகையாளரோடு முடிவைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, ஆரம்பம் முதலே திருமாவளவன் எட்டு சுற்றுகளில் 1,500 முதல் 2,000 ஓட்டுக்கள் என அ.தி.மு.க வேட்பாளரிடம் பின்தங்கியே வந்தார். ஒவ்வொரு சுற்றுகளிலும் அ.தி.மு.க வேட்பாளர் அதிகமாக வாக்கு வாங்கியதால் முகம் சிவந்தபடியே வெளியேறினார்.

திருமாவளவன்

பின்பு 11-வது சுற்றுகளிலிருந்து திருமாவுக்கு ஏறுமுகம்தான். அதுவும் பெரிய அளவில் இல்லை. 2,000, 3,000 வாக்கு வித்தியாசத்தில்தான் சென்றுகொண்டிருந்தது. அமைதியாக இருந்த வி.சி.க தொண்டர்கள் வெடிச் சத்தம், பேண்ட் மீயூசிக் போட்டு காதைக் கிழிய வைத்தார்கள். இந்த நிலையில் 18வது சுற்றுகளில் 15,623 வாக்குகள் முன்னணியில் இருந்த திருமாவளவன் அடுத்தடுத்து சரிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியானது. அதை டி.வி மற்றும் சமூக வலைதளங்களிலும் செய்தி பரவியது. இன்னும் மூன்று சுற்றுகள் மீதம் இருக்கும் நிலையில் அ.தி.மு.க வேட்பாளர் எப்படி முன்னிலையில் வருவார். இணையதளத்தில் ஒரு சுற்றுகள் முடிந்ததும் முழுவதுமாக ஏற்றுங்கள் என்று திருமாவளவன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். 

இதனால் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனால் ஒரு மணிநேரம் சலசலப்பு நிலவியது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமானது. அந்த நேரத்தில் கிழகாவட்டாங்குறிச்சி, காண்டிராதீர்த்தம், புவனகிரி என மூன்று வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் அதை எண்ணாமல் தனியாக எடுத்து வைத்திருந்தனர். இதை  பூத் ஏஜென்ட்டுகள் கண்டுபிடித்து திருமாவளவனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தேர்தல் அலுவலர்களிடம் கூறியபோது, எல்லாவற்றையும் எண்ணிவிட்டோம் கணக்கில் ஏற்றுகிறோம் என்று சொல்லி முடித்திருக்கிறார்கள். அதில் 2,000-க்கும் மேற்பட்ட வாக்குகளும் 250 தபால் வாக்குகளும் கிடைத்தது. இதனால் திருமாவளவன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. வாக்கு என்னும் மையத்தில் குழுமியிருந்த  வி.சி.க தொண்டர்களின் விசில் சத்தம் காதைக் கிழிய வைத்தது.

திருமாவளவன்

 அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். இவரைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 5,00,229 வாக்கு பெற்று 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், சிதம்பரம் தொகுதி தேர்தல் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி, அதிகாலை 3 மணியளவில் திருமாவளவனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். பின்பு பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துவிட்டு அவரின் தாயாரிடம் ஆசி பெறச் சென்றார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்தே இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. பதற்றமான தொகுதியாகவே இந்த நாடாளுமன்றத் தொகுதியைப் பார்த்தது தேர்தல் ஆணையம். அவர்கள் நினைத்தது போலவே பொன்பரப்பியில் கலவரம் நடந்தது. அந்தக் கலவரத்தை மூன்று நாள்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தது. வாக்கு என்னும் நாளில் எந்த வித பிரச்னைகளும் வந்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் அதிக ஆளவில் குவிக்கப்பட்டு எந்த அசம்பாவிதம் நடக்காமல் சிறப்பாக முடித்தார்கள்.