`என்னை வீழ்த்த நடந்த 3 சதிகள்!'- திருமாவளவன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் | Three traps were planned against me, feels Thiruma

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (24/05/2019)

கடைசி தொடர்பு:16:43 (24/05/2019)

`என்னை வீழ்த்த நடந்த 3 சதிகள்!'- திருமாவளவன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சிதம்பரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் குறித்தும் தன்னை வீழ்த்த நடந்த மூன்று சதிகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திருமா

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``தமிழகத்தைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணி ஒரு பொருந்தாக்கூட்டணி என்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டினோம். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நூற்றுக்குநூறு விழுக்காடு வெற்றி பெறும் என்பதை தேர்தலுக்கு முன்னரே தெரிவித்தோம். அதன்படி வரலாறு காணாத வகையில் அதிகபட்சம் ஐந்தேகால் லட்சம் வாக்குகள் வித்தி்யாசத்தில் குறைந்தபட்சம் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டிச்சேரி உட்பட 38 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. தி.மு.க தலைமையிலான இந்தக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வாரிவழங்கிய தமிழக மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும் தோழமை கட்சித் தலைவர்களுக்கும் சிறப்பாக பணியாற்றிய தோழமைக்கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்தக் கூட்டணிக்கு வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமாவளவன்

அகில இந்திய அளவில் எது நடக்கக் கூடாது என்று பெரும் கவலை கொண்டோமோ அது நடந்துவிட்டது என்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். சங்க்பரிவார் அமைப்புகள் சார்ந்தவர்களின் கைகளில் மீண்டும் ஆட்சி அதிகாரம் சிக்கிவிடக் கூடாது என்று எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டு வந்த எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் அணி திரண்டதைப் போல பிற மாநிலங்களிலும் அணி திரண்டிருந்தால் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் காங்கிரஸோடு கைகோத்து இந்தத் தேர்தலை சந்தித்திருந்தால் பா.ஜ.க-வை புறமுதுக்கிட்டு ஓடச் செய்திருக்க முடியும். எதிர்க்கட்சிகள் தமிழகத்தைப் போல் அல்லாமல் சிதறி நின்றதால் எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கி அதாவது பா.ஜ.க-வின் எதிர்ப்பு வாக்குவங்கி கடந்த தேர்தலில் சிதறியதைப்போல இந்தத் தேர்தலிலும் சிதறிவிட்டது. அதுதான் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

மேலும், திட்டமிட்டு சங்க்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் இந்துக்களுக்கு எதிரிகள் என்பது போன்ற அவதூறு பிரசாரத்தை வெகுவாக முன்னெடுத்தார்கள். கடைசி கட்டத் தேர்தலின்போது கேதர்நாத் குகைக்குள் போய் அமர்ந்து இந்துக்களை தம்வசப்படுத்தக்கூடிய நாடக அரசியலையும் மோடி மேற்கொண்டார். எதிர்க்கட்சிகளின் பலவீனம் சங்க்பரிவார் அமைப்புகளின் இந்து, இந்து அல்லாதார் என்கிற அவதூறு பிரசாரமும் அவர்களுக்கு இன்று கைகொடுத்திருக்கிறது. மேலும், பெரும்பாலான வடஇந்திய மாநிலங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களைக் கண்ட இடங்களிலே கைப்பற்றக்கூடிய நிலையை நாம் பார்த்தோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறையாக பாதுகாப்பாக அவர்கள் கையாளவில்லை என்பதை தேர்தலுக்கு முன்னரே அறிய முடிந்தது. அது மிகவும் ஐயத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட பல காரணங்களால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வடஇந்திய மாநிலங்களில் பெரும் பெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களால் எந்தப் பயனும் அடையமுடியவில்லை. அவர்களின் அவதூறு பிரசாரம் எடுபடவில்லை. தமிழ்நாடு சமூக நீதிக்கான ஒரு மண். பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் பக்குவப்படுத்திய மண். இங்கு சாதிவெறி சக்திகளுக்கும் மதவெறி சக்திகளுக்கும் இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

தொகுதியில் திருமாவளவன்

சாதிவெறியர்களும் மதவெறியர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ அவதூறு பிரசாரங்களை இந்த அணிக்கு எதிராக அவர்கள் முன்னெடுத்துப் பார்த்தார்கள். குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் என்னை வீழ்த்துவதற்கு 50 கோடியில் இருந்து 100 கோடிகளுக்கு மேலாக கொட்டி இறைத்தார்கள். அவதூறு பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். சாதி அரசியலை கூர்மைப்படுத்தினார்கள். அனைத்தையும் தாண்டி அனைத்துத் தரப்பு பொதுமக்களும் ஜனநாயக சக்திகளும் பேராதரவு நல்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். சாதிவெறி, மதவெறி சக்திகளின் அவதூறு பிரசாரம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மிககுறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரத்திலும் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லிலும் இந்த அணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. அந்த மகத்தான வெற்றியை வாரிவழங்கிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல் இடைத்தேர்தல்களில் 13 இடங்களில் தி.மு.க அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அ.தி.மு.க வெற்றி பெற்ற இடங்களில் தி.மு.க மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை நல்கியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்திருக்கிறது" என்றார். 

சிதம்பரம்  தொகுதியில் மட்டும்தான் இழுபறி தொடர்ந்து கொண்டிருந்தது. நீங்கள் தர்ணா போராட்டம் நடத்தியதாகவும், மாவட்ட ஆட்சியரை சந்தித்தாகவும் தகவல் வந்தது. என்னதான் நடந்தது அந்தத் தொகுதியில்?

``நான் வாக்கு எண்ணிக்கை நடந்த இடத்தில் இருந்தாலும் ஏன் அவ்வளவு கால தாமதம் என்பதற்கு எனக்கே இன்னும் விளங்கவில்லை. தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரையும் நேரிலே சந்தித்து, வாக்கு எண்ணிக்கை மிகவும் மந்தமாக இருக்கிறது, விரைவுபடுத்துங்கள் என்று இரண்டு மூன்று முறை நான் முறையிட்டேன். இரண்டு வேட்பாளர்கள் மிகவும் நெருக்கமாக முன்னே பின்னே வருவதால் துல்லியமாக நாங்கள் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டியது இருக்கிறது. ஆகவே, அவசரம் வேகம் என்பது முக்கியமல்ல. எண்ணிக்கையில் உள்ள துல்லியம்தான் மிகவும் முக்கியமானது என தேர்தல் பார்வையாளர் என்னிடத்தில் சொன்னார். அதன் காரணமாக என்னவோ, நள்ளிரவு 2.45 மணிக்குத்தான் முடிவை அறிவித்தார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையில்கூட மாலை 5 மணிக்கு மேல்தான் எண்ணவேத் தொடங்கினார்கள். அதில் உள்நோக்கம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும்கூட தாமதமானது ஏன் என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை".

திருமாவளவன்

நாளை நடக்கும் தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்பீர்களா?

``தி.மு.க எம்.பி.க்களுக்கான கூட்டம். கூட்டணி கட்சிகளுக்கான கூட்டம் அல்ல. கூட்டணி கட்சிகளுக்கான அழைப்பு வரும்போது கலந்து கொள்வோம்".

தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி தோல்வி அடைந்திருக்கிறார். இது குறித்து?

``இதில் கருத்துச் சொல்ல ஒன்னுமில்லை".

பொன்பரப்பியில் நடந்த வன்முறைக்கு விடுதலைச் சிறுத்தைகள்தான் காரணம் என்று பா.ம.க கூறியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். இது குறித்து?

``நான் யாருக்கும் கேடு நினைப்பதில்லை. எந்தச் சமூகத்துக்கு எதிராகவும் நான் கேடு செய்ததில்லை. அறம் வெல்லும் என்பதற்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சான்று. அனைத்துத்தரப்பு மக்களையும் நான் மதிக்கிறவன், நேசிக்கிறவன். ஆனால், திட்டமிட்டு அரசியல் ஆதாரத்துக்காக குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு நான் எதிரானவன் போன்ற தோன்றத்தை கடந்த இரண்டு தேர்தலில் பா.ம.க தொடர்ந்து பரப்பியது. இந்த அவதூறு முறியடிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவதூறுகளை முறியடித்த மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொன்பரப்பி மக்களுக்கும் தொகுதி மக்களுக்கும் எனது வெற்றியைக் காணிக்கையாக்கிறேன்".