`நீட் தேர்வு முடிவு வந்ததும் அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்!' -நளினி சிதம்பரம் | lawyer Nalini chidambaram speaks about NEET exams

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (24/05/2019)

கடைசி தொடர்பு:17:50 (24/05/2019)

`நீட் தேர்வு முடிவு வந்ததும் அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்!' -நளினி சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம், பா.ஜ.க வேட்பாளரான ஹெச்.ராஜாவைவிட கிட்டத்தட்ட மூன்று லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றி குறித்து கார்த்தி சிதம்பரத்தின் தாயாரும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் பேசினோம்.

நளினி சிதம்பரம்

``என் மகனின் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், அரசியலில் என் மகன் உயர உயரப் பறப்பார் என்று நம்புகிறோம். இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தொகுதி மேம்பாட்டுக்காகக் கண்டிப்பாக அவர் உழைப்பார். முதலில் தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் மக்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும். பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களுடைய பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்று என் மகனிடம் சொல்லியிருக்கிறேன்'' என்றவரிடம், ஹெச்.ராஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றதைப் பற்றி சொல்லும்போது ``தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. என் மகனும் வெற்றி பெற்றிருக்கிறார்'' என்றார்.

அவரிடம் நீட் பிரச்னை குறித்துக் கேட்டோம். ``தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னை என்றால் அது நீட் தான். காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என்று அறிவித்திருந்தது'' என்றவர் நீட் குறித்த தன் எண்ணத்தை நம்மிடம் பகிர்ந்தார்.
``காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது பி.ஜே.பி அல்லவா மத்தியில் ஆட்சி அமைக்கப்போகிறது. அவர்கள்தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும். நீட்டை ஒழிப்பது மத்தியில் ஆளும் அரசிடமே இருக்கிறது. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்குச் செய்ய வேண்டிய சட்டபூர்வமான வழிவகைகளைச் செய்வதற்கு என்னிடம் யோசனை இருக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வின் முடிவுகளைப் பொறுத்து சட்டபூர்வமாக அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க